இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி
x

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல் துறையிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை காவல் துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதித்து இந்த இசை நிகழ்ச்சி நடந்த அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக டிக்கெட்டுகள் விற்கக்கூடாது என்றும் டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 ஆயிரம் எண்ணிக்கையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை முறையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் காவல்துறையினர் நிபந்தனை விதித்து அனுமதி வழங்கியுள்ளனர். 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு ஏற்பட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுபோன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story