பீஸ்ட் படத்தில் நடித்தவர்.. பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார்


பீஸ்ட் படத்தில் நடித்தவர்.. பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார்
x

விஜய்யுடன் சுப்பலட்சுமி

தமிழில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் ஆர்.சுப்பலட்சுமி நடித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகையும் இசைக்கலைஞருமான ஆர்.சுப்பலட்சுமி காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.

அவரது மறைவு குறித்த தகவலை அவரது பேத்தி சவுபாக்யா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவர் ஆர்.சுப்பலட்சுமியின் மகளும் நடிகையுமான தாரா கல்யாணின் மகள் ஆவார்.


கேரளாவில் 21 ஏப்ரல் 1936 ஆம் ஆண்டு பிறந்த ஆர்.சுப்பலட்சுமி, திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர் பாலபவனில் இசைக்கலைஞராகவும் நடனப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். பின்னர் 1951 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் பணியாற்றிய தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையையும் படைத்தார். டப்பிங் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

தனது 66வது வயதில் முதன்முறையாக பிருத்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் ஆர்.சுப்புலட்சுமி திரைத்துறையில் நுழைந்தார். அதன்பிறகு, கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் ஆர்.சுப்பலட்சுமி கவனம் பெற்றிருந்தார். பீஸ்ட் படத்தில் பணயக் கைதியாக நடித்திருந்தார்.

ஆர்.சுப்பலட்சுமியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story