கேரளா விவகாரம் குறித்த கேள்வி; கோபத்தில் நடிகர் ஜீவா சொன்ன வார்த்தையால் பரபரப்பு
நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார். ஜவுளிக்கடையை திறந்து வைத்து, புகைப்படங்கள் எடுத்த பிறகு நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேனி மாவட்டத்திற்கு வந்திருப்பதாகவும், 'தெனாவட்டு' திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு தேனியில்தான் நடைபெற்றது எனவும் கூறினார்.
தொடர்ந்து ஜீவாவிடம், கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இது உண்மையில் மிகவும் தவறானதுதான். எல்லா துறைகளிலும் இதுபோல் நடக்கிறது. முன்பு 'மீ டூ' (Me Too) மூலம் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சினைகளை சொன்னார்கள். தற்போது மீண்டும் அதே போல் ஒரு விஷயம் நடக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது ஒரு நல்ல விஷயத்திற்காக வந்திருக்கிறோம்." என்றார்.
இதற்கு செய்தியாளர்கள், "நீங்கள் ஒரு நடிகர் என்பதால் ஹேமா கமிட்டி குறித்து உங்களிடம் கேட்கிறோம்" என்றனர். அதற்கு, "ஏற்கனவே நான் பதில் சொல்லிவிட்டேன்" என்று கூறி ஜீவா அங்கிருந்து செல்ல முற்பட்டார்.
இதனிடையே கேள்வி கேட்ட நபருக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடிகர் ஜீவா கோபத்தில், 'அறிவு இருக்கிறதா?' என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், "கேள்வி கேட்டால் நீங்கள் எப்படி இவ்வாறு கூறலாம்" என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை வெளியே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஜவுளிக்கடை திறப்பு விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.