சிறுவயதில் நடித்ததற்காக எனது தந்தை அடித்தே கொல்லப் பார்த்தார்- சங்கத்தமிழன் பட நடிகர்


சிறுவயதில் நடித்ததற்காக எனது தந்தை அடித்தே கொல்லப் பார்த்தார்- சங்கத்தமிழன் பட நடிகர்
x

சிறுவயதில் ராம்லீலாவில் சீதையாக நடித்ததற்காக தனது தந்தை தன்னை அடித்தே கொல்லப் பார்த்தார் என பாலிவுட் நடிகர் ரவி கிஷன் தெரிவித்துள்ளார்.

1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். தெலுங்கு, தெரே நாம், டானு வெட்ஸ் மனு பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்துள்ளார். டி. ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது போஜ்புரி ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கும் ரவி கிஷன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

நடிகர் ரவி கிஷன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிறு வயதில் நடித்ததற்காக தனது தந்தையிடம் கடுமையாக அடி வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதே தந்தை இறக்கும்போது நடிப்புத்துறையில் தனது வளர்ச்சியைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு, "நீ நமது குடும்பத்தின் சொத்து!" எனக் கூறியதையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, "என் அப்பா கோயில் அர்ச்சகர். அவர் எப்போதும் நான் விவசாயம் செய்ய வேண்டும் அல்லது அர்ச்சகராக வேண்டும் அல்லது ஏதாவது அரசாங்க வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஒரு கலைஞன் தன் குடும்பத்தில் பிறக்க முடியும் என்று அவர் நினைக்கவே இல்லை. அதனால் ராம்லீலாவில் சீதையாக நடித்தது அவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் அவர் என்னைக் கொல்லும் அளவுக்கு அடித்தார். நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். அந்த கோபத்தில் என்னுடைய 17 ஆவது வயதில் கையில் ரூ. 500 உடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அன்று வாங்கிய அடிகள்தான் என்னை ரவி கிஷனாக மாற்றியது. அப்பா இறக்கும் போது கண்களில் கண்ணீரோடு என் கைகளைப் பிடித்துக் கொண்டு 'நீ நமது குடும்பத்தின் சொத்து!' எனக் கூறியது இன்றும் நினைவிருக்கிறது" என்றார்.


Next Story