காந்தாரா வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டிக்கு பாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு


காந்தாரா வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டிக்கு பாலிவுட்டில் இருந்து வந்த அழைப்பு
x

காந்தாரா பட வெற்றியை அடுத்து நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டிக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்து உள்ளது.புனே,


கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்தகாந்தாரா திரைப்படம், கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிட முடிவானது. அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியானது.

ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப். படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படம் என்ற பெருமையை காந்தாரா பெற்று உள்ளது.

உடுப்பி பக்கம் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையையும், நம்பிக்கை துரோகம், வலியையும் வெளிப்படுத்தும் விதமாக மண்வாசனையோடு கலந்து கொடுத்திருந்த இந்த படம், இந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களாலுமே ஏற்று கொள்ளப்பட்டு விட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பெல்பாட்டம் படம் ரிஷப் ஷெட்டியை கதாநாயகனாக உயர்த்தியது. இந்த நிலையில், தான் எழுதிய கதையில் நடித்து, இயக்கவும் செய்த காந்தாரா திரைப்படம், தென்னகம் மட்டுமின்றி இந்தி பேசும் மக்கள் இடையேயும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து, பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூட திரையரங்கில் படம் பார்த்து விட்டு ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து பேசினார்.

பெங்களூருவில் சமீபத்தில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் பேசும்போது, கன்னடத்தில் எடுக்கப்பட்ட காந்தாரா படம், மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளது. இதனை தொழில் முதலீட்டாளர்கள் முன்உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். அந்த படம் முதலீட்டாளர்களுக்கு உந்துசக்தியாக உள்ளது என கூறினார்.

இந்த நிலையில், காந்தாரா பட வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு பாலிவுட் இயக்குனர்களிடம் இருந்தும் நடிப்பதற்கான அழைப்புகள் வந்தன.

எனக்கு உண்மையில் நடிகர் அமிதாப் பச்சனை அதிகம் பிடிக்கும். நடிகர்கள் ஷாகித் கபூர் அல்லது சல்மான் பாய் மற்றும் பலர் என ஒவ்வொருவரையும் நான் ரசிக்கிறேன். எனினும், தற்போது கன்னட திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.


Next Story