மீண்டும் படம் இயக்க வரும் சசிகுமார்
நான் மீண்டும் புதிய படத்தை டைரக்டு செய்ய இருக்கிறேன் என சசிகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டைரக்டரும், நடிகருமான சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ''நான் மீண்டும் புதிய படத்தை டைரக்டு செய்ய இருக்கிறேன். தற்போது நான் இயக்கும் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் கதாநாயகனாக நான் நடிக்கவில்லை. வேறு பிரபல நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். ரஜினியுடன் ஏற்கனவே நடித்து விட்டேன். மீண்டும் அவரோடு நடிக்க ஆர்வம் உள்ளது. அழைப்பு வந்தால் உடனே போய் நடிப்பேன். விஜய், அஜித்குமார் இருவரையும் எனக்கு பிடிக்கும். நான் நடித்துள்ள நான் மிருகமாய் மாற, காரி ஆகிய இரண்டு படங்களும் ஒரு வார இடைவெளியில் வெளியாவதை சம்பந்தபட்டவர்கள் பேசி தடுத்து இருக்கலாம். ஆனால் அவர்களின் ஈகோ காரணமாக பேச தயாராக இல்லை. சத்ய சிவா டைரக்டு செய்துள்ள நான் மிருகமாய் மாற படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தாலும் மனைவி, குழந்தை என்று சராசரி மனிதன் வாழ்க்கையை சரியாக பயன்படுத்தி உள்ளனர். ஹரிபிரியா நாயகியாக வருகிறார். ஜிப்ரான் பின்னணி இசை கூடுதல் பலம். படத்தில் அனைத்துமே புதிதாக இருக்கும். எனது நடிப்பில் வெளிவர இருக்கும் 2 படங்களுமே வெற்றி பெற வேண்டும்'' என்றார்.