ஷூ திருடிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியருக்கு ஆதரவு தெரிவித்த ஒஸ்தி பட நடிகர்


ஷூ திருடிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியருக்கு ஆதரவு தெரிவித்த ஒஸ்தி பட நடிகர்
x

வாடிக்கையாளரின் ஷூக்களை திருடிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியருக்கு ஆதரவாக ட்வீட் செய்த சோனு சூட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிய சோனு சூட் ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியர் ஒருவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த ட்வீட்டுக்கு அவரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், அவரை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் வீட்டில் உணவை வழங்கி விட்டு வீட்டின் வெளியே இருந்த ஷூக்களை திருடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

அதற்கு நடிகர் சோனு சூட் தனது ஆதரவை ஆன்லைன் உணவு விநியோக நிறுவன ஊழியருக்கு எக்ஸ் தளபக்கம் மூலம் தெரிவித்துள்ளார். " உணவு டெலிவரி செய்யும் நபர் உணவை வழங்கிய பிறகு ஷூக்களை திருடி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அது அவருக்கு தேவைப்படலாம். அன்பாக இருங்கள்" என பதிவு செய்து இருந்தார்.

நடிகர் சோனு சூட் ரசிகர்கள் பலர் அவரின் இந்த பதிவை பாராட்டினாலும், ஒரு சில நெட்டிசன்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஒரு சில சமூக ஊடக பயனர்கள் நியாயப்படுத்லை எதிர்க்கிறார்கள். தேவைக்காக திருடுவது நியாயமில்லை. ஒரு டெலிவரி பையனை காட்டிலும் மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் உள்ளனர். பலரும் கடினமாக உழைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். திருடுவதை நியாயப்படுத்துவது மரியாதையான செயல் அல்ல என பகிர்ந்துள்ளனர். இப்படி பல பயனாளர்கள் அவரவர்களின் கருத்தை சோனு சூட் எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.


Next Story