பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை


பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 21 May 2024 2:30 PM IST (Updated: 21 May 2024 4:40 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ஒவ்வொரு ஊர் மற்றும் நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் உணவு வகைகளை ருசி பார்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவரது யூடியூப் பக்கத்தில் 40 லட்சம் பேர் வரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இர்பான் துபாயில் தனது மனைவிக்கு பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தை இதுதான் என விழா நடத்தி அறிவித்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை பரிந்துரைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், காவல் துறையில் புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் பாலினம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படாவிட்டாலும், அதனை வீடியோ மூலம் பொது வெளியில் அறிவித்தது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் குழந்தை வளர்ச்சியை நவீன முறையில் ஸ்கேன் செய்யும் வசதி வந்தபோது கருவிலேயே ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பிறப்புக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கேட்பதோ அல்லது கண்டறிந்து அறிவிப்பதோ மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதோடு குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சில வெளிநாடுகளில் குழந்தைகளின் பாலினத்தை கண்டறியவோ அதனை அறிவிக்கவோ எந்த தடையும் இல்லை.


Next Story