மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: சேலம் அலங்கார்


மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: சேலம் அலங்கார்
x

மாவட்டத்தில் முதல் குளிர்சாதன (ஏ.சி) தியேட்டர் என்ற சிறப்பு, சேலம் அலங்கார் திரையரங்கிற்கு உண்டு. ஏ.சி.யால் ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறி, ஆரம்பத்தில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இங்கு அனுமதித்தது இல்லையாம்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ளது பாப்பிரெட்டிப்பட்டி. அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கட்ராமன் செட்டியார்.

தொழில் நிமித்தமாக அவர் சேலம் பகுதியில் வந்து குடியேறினார். அவருக்கு பி.வி.நடராஜன், பி.வி.சுந்தரம், பி.வி.பாண்டுரங்கன், பி.வி.நாகராஜன் என்று 4 மகன்கள்.

அவர்கள் வெல்லமண்டி, மளிகைக்கடை, பருப்பு மொத்த வியாபாரம் என்று கூட்டாக தொழில் செய்து வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் சினிமா மோகம் உச்சத்தில் இருந்தது. திருவிழாவுக்கு போவதுபோல் ஆணும், பெண்ணும் சினிமா கொட்டகைகளுக்கு படையெடுத்துப் போவார்கள்.

அதைப் பார்த்த 4 சகோதரர்களுக்கும் லாபகரமாக இருக்கும் சினிமாத் தொழிலில் கால் பதிக்கும் எண்ணம் எழுந்தது. அதற்காகத் தியேட்டர் ஒன்றைக் கட்ட முடிவு செய்தார்கள்.

மற்றத் தியேட்டர்கள் போல் அல்லாமல் நவீன வசதிகளுடன் புதிய தியேட்டரைக் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்காக பெங்களூருவில் இருந்து கட்டிடக்கலைப் பொறியாளர்களை வரவழைத்தார்கள்.



1967-ம் ஆண்டு ஜூன் மாதம், சேலம் கிச்சிப்பாளையத்தில் பழைய பஸ் நிலையம் அருகில், புதிய தியேட்டரின் கட்டுமானப்பணி தொடங்கியது.

தியேட்டர் என்றால் நீளமும், அகலமும் கொண்ட பரந்து விரிந்த அரங்கமாக இருக்கும்.

அலங்கார் தியேட்டர் அப்படி அல்ல. 120 அடி நீளம் கொண்ட திரையரங்கின் முன்பகுதி 72 அடி அகலமும், உள்ளே செல்லச் செல்ல சற்றுக் குறுகி, திரை அருகில் செல்லும் போது அகலம் 62 அடியுமாக இருக்கும்.

இந்த வடிவமைப்பால் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் வெள்ளித்திரை துல்லியமாகத் தெரியும். 1,144 இருக்கைகள். பால்கனிக்குச் செல்ல தியேட்டரின் உள்ளே நுழைந்தவுடன் இருபுறமும் மாடிப்படிகள்.

படிக்கட்டில் ஏறும்போது ரசிகர்களை உண்மையாகப் படம்பிடித்துக் காட்டும் ராட்சத நிலைக்கண்ணாடி.

தியேட்டரின் முன்பு 115 அடி அகலத்திலும், 40 அடி நீளத்திலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி. மொத்தத்தில் 33 ஆயிரம் சதுர அடியில் அலங்கார் தியேட்டர் அலங்காரமாகவே கட்டி முடிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் குளிர்சாதன வசதி, அதிக இருக்கைகள், தியேட்டர் முன்பாக பார்க்கிங் வசதி என்பது எல்லாம் அலங்காருக்குரிய கூடுதல் பெருமை என்று சொல்லலாம்.

இவ்வளவு சிறப்புக்களுடன் கட்டப்பட்ட அத்தியேட்டர் 27-3-1969-ம் நாள் திறந்துவைக்கப்பட்டது.

முதல் படமாக ராமண்ணா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தங்கச்சுரங்கம் திரையிடப்பட்டது. முதல் படமே 70 நாட்களைக் கடந்து ஓடியது. அதன்பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வெற்றிநடை போட்டன.

தமிழ்த் திரை உலகின் முதல் சினிமாஸ்கோப் படமான சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் அலங்கார் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆனது. டி.டி.எஸ். (டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்) என்ற தொழில்நுட்பத்தில் வெளியான கருப்பு ரோஜா திரைப்படம் சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் வெளியானதும் அலங்கார் தியேட்டரில்தான்.

1980- 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் வெளியான ரஜினி, கமல், சரத்குமார், பாக்கியராஜ், விஜயகாந்த் படங்களும் வெற்றி வாகை சூடின. டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படம் அதிகபட்சமாக 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

குறிப்பாக ஏற்காடு மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்புக்கு வரும் நடிகர், நடிகைகள் அலங்கார் தியேட்டருக்கு வரத் தவறுவது இல்லை.

சிவகுமார், ஜூனியர் பானுமதி, மேஜர் சுந்தர்ராஜன், சரத்குமார், விஜய், ஆபாவாணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படக் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். கன்னி பருவத்திலே படம் வசூலை குவித்ததைத் தொடர்ந்து பாக்கியராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் வந்தனர்.

அத்தகைய பெருமை வாய்ந்த அலங்கார் திரையரங்க நிர்வாகம் 1990-ம் ஆண்டில் 4 சகோதரர்களில் ஒருவரான பி.வி.சுந்தரம் வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அவருடைய மகன் சுப்பிரமணியன் கவனித்து வந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பேரன் ராஜ்குமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்படத் தியேட்டரை நிர்வகித்து வருகிறார்.

அந்த அனுபவங்களை நம்மிடம் வெளிப்படையாக அவர் விளக்கிச் சொல்கிறார்.

'எங்களுடைய தாத்தா பி.வி.சுந்தரம், அவருடைய அண்ணன், தம்பிகளுடன் சேர்ந்து தொடங்கிய அலங்கார் தியேட்டர், சாதாரணமாக தொழில் செய்து வந்த எங்களது குடும்பத்தை வெளி உலகுக்கு தெரியும்படி செய்தது. எனவேதான் பெரிய அளவில் வருமானம் இல்லா விட்டாலும், சினிமா மீதான காதல், தியேட்டர் மீதான அன்பின் காரணமாக அர்ப்பணிப்புடன் தியேட்டரை தொடர்ந்து நடத்தி வருகிறேன். கால மாற்றத்துக்கு ஏற்ப, படங்களை திரையிட நவீன எந்திரங்கள், கருவிகள் வந்து விட்டன. அதனை பயன்படுத்திதான் தற்போது படங்களை திரையிடுகிறோம். ஆனாலும் தியேட்டர் தொடங்கும் போது நிறுவப்பட்ட புரஜக்டர் கருவியை கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாவிட்டாலும், இன்று வரை சுத்தம் செய்து பராமரித்து வருவதுடன், முன்னோர் நினைவாக பாதுகாத்தும் வருகிறேன்' என்கிறார் பெருமையுடன் ராஜ்குமார்.


Next Story