மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை - 7. சேலம் ஓரியண்டல்


மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை - 7. சேலம் ஓரியண்டல்
x

தியேட்டர்கள் நிறைந்த நகரம், சேலம். திரையரங்குகளின் சரணாலயம் என்றுகூட அதைச் சொல்லலாம். பழைய பஸ் நிலையம் அருகே பார்த்தோம் என்றால் திரும்பிய பக்கம் எல்லாம் திரையரங்குகளின் வாசல்கள்தான் நம்மை வரவேற்கும்.si

சேலம் நகர்முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தன. பழைய பஸ்நிலையப் பகுதியில் மட்டும் 20-க்கும் அதிகமான தியேட்டர்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. இது 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.

1916-ம் ஆண்டு அதேப் பகுதியில் கிச்சிபாளையம் செல்லும் சாலையில் ஒரு தியேட்டர் கட்டப்பட்டது. அதன் உரிமையாளர் வேலாயுதம் பிள்ளை. நகரில் பிரபலமானவர். அப்போது சேலம் நகரில் மின்சார விளக்குகளைப் பார்ப்பதே அரிது. அந்த நேரத்தில் இந்தத் திரையரங்கத்தில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் அதற்கு 'மங்கள விலாஸ் எலெக்ட்ரிக் தியேட்டர்' என்று பெயர் வைத்தார்.

1-11-1926 அன்று அது புதுப்பிக்கப்பட்டு ஓரியண்டல் தியேட்டராக பெயர் மாற்றம் பெற்றது. சேலத்தில் முதல் தியேட்டர் என்ற பெருமையும் அதற்கு உண்டு.

ஆரம்பத்தில் ஊமைப் படங்களே காட்டப்பட்டு வந்தன. 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன. காளிதாஸ் அங்கு திரையிடப்பட்ட முதல் பேசும் படம். காலை காட்சியாக குறவஞ்சி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. வேலாயுதம் பிள்ளை தியேட்டர் தொழிலுடன், சுப்பாராய முதலியார் என்பவருடன் இணைந்து ஏஞ்சல்ஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் நடத்திவந்தார்.




1933-ம் ஆண்டு அவர்களுடன் சேர்ந்து டி.ஆர்.சுந்தரம் படங்களை தயாரித்தார். அப்போது கல்கத்தா (இப்போது கொல்கத்தா) நகரில்தான் ஸ்டூடியோக்கள் இருந்தன. அதன்பிறகே ஏற்காடு அடிவாரத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற சினிமாப் படப்பிடிப்பு ஸ்டூடியோவை டி.ஆர்.சுந்தரம் நிறுவினார் என்பது வரலாறு. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் 16-5-1959 அன்று ஓரியண்டலில் வெளியானது. அப்போது, தியேட்டரின் வாசல் முகப்பு கோட்டை போன்று 'செட்' போடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.100 நாட்கள் அந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

வெற்றி விழாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நேரில் வந்து கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தினர். அதற்காக ஓரியண்டல் தியேட்டர் முன்பு மெயின் ரோட்டில் விசேஷ பந்தல் அமைத்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. ஒரு சினிமா தியேட்டரில் ரசிகர்களுக்கு இவ்வாறு விருந்து கொடுத்தது வேறு எங்கும் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

சேலத்துக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஒருமுறை சிவாஜிகணேசனும், வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமியும் கயத்தாறு வழியாக காரில் சென்றனர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தைப் பற்றி அவர்களிடையே பேச்சு எழுந்தது. அப்போது சக்தி கிருஷ்ணசாமி கட்டபொம்மன் கதையை நாடகமாக ஆக்கலாம் என்ற விருப்பத்தை சிவாஜியிடம் சொல்ல, உடனே அவரும் நாடகமாக தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி உருவானதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன்!

சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனத்தை ஒரே மாதத்தில் எழுதி முடிக்க, சிவாஜி நடிக்க 'வீரபாண்டிய கட்டபொம்மன்' முதல் நாடகம் சேலத்தில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. பிரமாண்ட செட்டுகளுடன் நடத்தப்பட்ட அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான முறை மேடைகளில் அரங்கேற்றப்பட்டு பிறகே திரைப்படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

1986-ம் ஆண்டு ஓரியண்டல் அருகே 'ஓரியண்டல் சக்தி' என்ற பெயரில் குளுகுளு வசதியுடன் ஒரு புதிய தியேட்டர் திறக்கப்பட்டது. மக்களின் ஆதரவுடன் அது இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓரியண்டல் மட்டும் 1999-ம் ஆண்டு மூடப்பட்டு வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டது.


'எங்கள் வீட்டில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்'



1967-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி எம்.ஜி.ஆர். நடித்த காவல்காரன் ஓரியண்டல் தியேட்டரில் ரிலீசானது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி, ஜெயலலிதா.

நம்பியார் ஒரு ஜமீன்தார். அவரது மாளிகையில் பல மர்மங்கள் நடக்கும். அதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி மர்மமாகக் கொலை செய்யப்படுவார். அந்த நேரத்தில் நம்பியாரிடம் கார் டிரைவராக எம்.ஜி.ஆர். வேலைக்குச் சேருவார். நம்பியாரின் மகள்தான் ஜெயலலிதா. இருவருக்கும் காதல் மலரும். மாளிகையில் நடக்கும் அதர்மங்களை அடித்து ஆடுவதுடன் இறுதியில் நம்பியாரின் முகத்திரையை கிழித்துப் போடுவார், எம்.ஜி.ஆர்.

அப்போதுதான் தெரியவரும் அவர் வெறும் கார் டிரைவர் அல்ல; ஒரு துப்பறியும் போலீஸ் என்பது!

கதையை ஆர்.எம்.வீரப்பன் எழுதியதுடன் படத்தையும் அவரே தயாரித்து இருந்தார்.

அந்தப் படம் ரிலீசான ஆண்டில் தமிழகத்தில் இரண்டு பிரளயங்கள் நடந்தன. ஒன்று அதிர்ச்சியைத் தந்தது. அதுதான் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது! ஜனவரி 12-ந் தேதி நடிகர் எம்.ஆர். ராதா, துப்பாக்கியால் அவரைச் சுட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்து அதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.




மற்றொரு சம்பவம் வியக்க வைத்தது! அதுதான் காங்கிரசை அகற்றிவிட்டு தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது! மார்ச் 6-ந் தேதி அறிஞர் அண்ணா தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே பரங்கிமலை தொகுதி எம்.எல்.ஏ. ஆக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

காவல்காரன் படத்தில் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்த நிலையில்தான் அவர் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தேர்தலும் முடிந்தது. ஓரிரு மாதங்களில் அவர் உடல்நலம் தேறி மீண்டும் நடிக்கத் தொடங்கி காவல்காரன் படத்தை முடித்துக் கொடுத்தார். கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்ததால் குரல் உடைந்து போய் இருந்தது. அவருக்குப் பதிலாக டப்பிங் குரலில் ஒருவரை பேச வைக்கலாமா? என்று படக்குழுவினர் யோசித்த வேளையில், அதை எம்.ஜி.ஆர். ஏற்க மறுத்துவிட்டார். பேச்சுப் பயிற்சி எடுத்துக்கொண்டு சொந்தக் குரலில் அவரே பின்னணி குரல் கொடுத்தார். படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆரின் குரல் பிசிறு இல்லாமல் ஒலிக்கும். பின்பகுதிகளில் அவரது உரையாடல்களை புரிவதில் நமக்கு சிரமங்கள் இருக்கும். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். ரசிகர்களில் பலர் மனமுடைந்து அழுதவர்களும் உண்டு. அதுவே பெரிய விளம்பரமாகி படம் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்றது.

ஓரியண்டல் தியேட்டரில் 'காவல்காரன்' படம் திரையிடப்பட்ட இனிய நிகழ்வுகளை வேலாயுதம் பிள்ளையின் பேரனும், ஓரியண்டல் சக்தி தியேட்டரின் உரிமையாளருமான எஸ்.பிரபாகரன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இதோ அவரே பேசுகிறார்.. "எம்.ஜி.ஆர். சுடப்பட்ட பிறகு 8 மாதங்கள் கழித்து, அவர் முழுமையாக நடித்து வெளிவந்த முதல் படம் 'காவல்காரன்'. அவரது கழுத்தில் பாய்ந்த குண்டுக் காயத்தால் குரல் மாறிப் போய் இருந்தது. எம்.ஜி.ஆரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

எங்களது தியேட்டரில் முதல்நாள், முதல்காட்சியை அப்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். சேலத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்தவர், எங்கள் தாத்தா வேலாயுதம் பிள்ளையின் அழைப்பினை ஏற்று ஓரியண்டல் தியேட்டருக்கு வந்தார். அதேபோல் 'காவல்காரன்' படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்க எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேலம் வந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். திறந்த ஜீப்பில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த வெற்றி விழாவில் அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த துரை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



ஜெயலலிதா, அவருடைய தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மையார் எல்லாம் எங்களது வீட்டிற்கு வந்து காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிட்டது எங்களால் மறக்க முடியாத இனிமையான நினைவு. இன்னும் சொல்லப் போனால் ஓரியண்டல் தியேட்டருக்கு வராத நடிகர், நடிகைகளே இருக்க முடியாது. சிவாஜிகணேசனின் 'திரிசூலம்' 200 நாட்கள், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' 150 நாட்கள், எம்.ஜி.ஆரின் 'மலைக்கள்ளன்' 150 நாட்கள், 'ஆதிபராசக்தி' 100 நாட்கள், 'காதலிக்க நேரமில்லை' 100 நாட்கள் என எங்களது தியேட்டரின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்" என்றார்.


Next Story