தியாகராஜ பாகவதரை சிறையில் தள்ளிய லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வெப் தொடராகிறது


தியாகராஜ பாகவதரை சிறையில் தள்ளிய லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வெப் தொடராகிறது
x

திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்களுக்கும் வரவேற்பு இருப்பதால் நிறைய தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். வாழ்க்கை தொடர் வெப் தொடர்களும் வருகின்றன.

இந்த நிலையில் சுதந்திரத்துக்கு முன்பு 1940-களில் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் நடந்த உண்மை சம்பவமான லட்சுமி காந்தன் கொலை வழக்கு வெப் தொடராக தயாராக உள்ளது. சினிமா பிரபலங்களை பற்றி அவதூறு கட்டுரைகள் எழுதியதாக லட்சுமி காந்தன் வேப்பேரி அருகில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகராக கொடிகட்டி பறந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கினால் தியாகராஜ பாகவதர் செல்வத்தை இழந்து கடைசி காலத்தில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். கொலைக்கு பின்னால் இருக்கும் அறியப்படாத சதித்திட்டங்கள் தொடரில் இடம்பெறும் என்று அறிவித்து உள்ளனர். இந்த தொடருக்கு 'மெட்ராஸ் மர்டர்' என்று பெயர் வைத்துள்ளனர். டைரக்டர் விஜய் மேற்பார்வையில் சூரிய பிரதாப் இயக்குகிறார்.

டைரக்டர் விஜய் கூறும்போது, ''மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் சவாலான மெட்ராஸ் மர்டர் தொடரில் நானும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.


Next Story