டி.ராஜேந்திரன் இசையில், 163 மொழிகளில் தயாராகும் 'நான் கடைசி வரை தமிழன்'


டி.ராஜேந்திரன் இசையில், 163 மொழிகளில் தயாராகும் நான் கடைசி வரை தமிழன்
x
தினத்தந்தி 12 Sep 2023 11:22 AM GMT (Updated: 12 Sep 2023 11:24 AM GMT)

'அவதார்-2' படம் 160 மொழிகளில் திரையிட்டுள்ளார்கள், தமிழனின் பெருமை சொல்லும் இந்த படத்தை 163 மொழிகளில் தயாராக்க இருக்கிறோம்.

சி.ஆர்.டி. நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் புதிய படம் 'நான் கடைசி வரை தமிழன்'. இந்த படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். நடிகர்-நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த படம் 163 மொழிகளில் தயாராக இருக்கிறது என அப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

'நான் கடைசி வரை தமிழன்' படம் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. மகாத்மா காந்தி,அகிம்சை வழியில் கடைசி வரை போராடி தான் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தை பெற்று தந்தார். தஞ்சை பெரிய கோவிலை பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு தான் ராஜராஜ சோழன் கட்டினார்.ராஜேந்திர சோழன் கடைசி வரை போராடி தான் புலிக்கொடியை நாட்டினார். கரிகால சோழன் கடைசி வரை போராடி தான் கல்லணையை கட்டினார். முல்லைப் பெரியாறு அணையை கட்டியும் இடிந்து விழுந்து விட்டது. ஆனால் மீண்டும் கடைசி வரை போராடி முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்கள்.

இதைப்போலத்தான் இந்த படத்தை எந்த படத்துக்கும் இல்லாத வகையில், 163 மொழிகளில் தயாராக்க இருக்கிறோம். அந்தவகையில் நாங்களும் கடைசி வரை வென்று காட்டுவோம்.

'அவதார்-2' படம் 160 மொழிகளில் திரையிட்டுள்ளார்கள். தமிழனின் பெருமை சொல்லும் இந்த படத்தை 163 மொழிகளில் திரையிட்டு காட்ட முடியாதா? நிச்சயம் செய்து காட்டுவோம், வென்றும் காட்டுவோம்.

இந்த படம் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு படமாகவும், தமிழரின் பெருமை சொல்லும் அடையாள பாடமாகவும் இருக்கும். நடிகர்-நடிகைகள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். வரலாற்று படங்கள் எப்போதுமே தோற்றது கிடையாது. அந்தவகையில் பழமை வாய்ந்த, உலகத்தில் ஒப்பில்லாத இனமாம் தமிழரின் பெருமைகளை, மேன்மைகளை உணர்த்தும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். நீண்ட இடைவெளிக்கு பிறகு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் இந்த படத்துக்கு இசையமைத்தது பெரும் பலம். அவரது ரசிகர்கள் காத்திருங்கள். நல்ல இசை விருந்துக்கு, என இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.


Next Story