கதாநாயகர்களான நகைச்சுவை நடிகர்கள்


கதாநாயகர்களான நகைச்சுவை நடிகர்கள்
x

கமர்ஷியல் நடிகர்களுக்கும், காமெடி நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரு தரப்பினருக்கும் தேவைப்படுவது நல்ல கதைதான்.

ஒரு படத்தின் அச்சாரமாக கருதப்படும் கதை சிறப்பாக இருந்தால் அதில் யார் நடித்தாலும் வெற்றி உறுதி.அந்த வகையில் பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இன்றைய டிஜிட்டல் காலம் வரை என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, வடிவேலு உள்பட பல நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாகவோ அல்லது கதையின் நாயகனாகவோ நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்றும் பல காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். கதாநாயகர்கள் கிடைக்காத காரணத்தினால் என்று இல்லாமல், காமெடி நடிகர்களுக்கு இருக்கக்கூடிய புகழையும், செல்வாக்கையும் பயன்படுத்தவே விரும்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சமீப காலமாக பல காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடித்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறார்கள். வடிவேலு, விவேக் காலகட்டத்திற்குப் பிறகு சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார்.

சந்தானம்

சந்தானம் புகழின் உச்சியில் இருக்கும்போதே அவருக்கு கதை நாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவரும் அதை சரியாக பயன்படுத்தி தன்னை கமர்ஷியல் நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த `டிடி ரிட்டன்ஸ்' படத்தைச் சொல்லலாம். தற்போதைக்கு` கிக்', `வடுகப்பட்டி ராமசாமி' உள்பட ஏராளமான படங்கள் சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ளது.

யோகி பாபு

இதே நிலைதான் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் நிகழ்ந்து வருகிறது. யோகிபாபு திரையில் தோன்றினாலே ரசிகர்கள் சிரிக்கும் அளவுக்கு தோற்றம், வசன உச்சரிப்பு, உடல் மொழி எல்லாமே இவருக்கு பலமாக அமைந்துள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் அதே வேளையில் கதாநாயகனாகவும் நடித்து மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். `தர்ம பிரபு', `கூர்கா', `பொம்மை நாயகி', ' மண்டேலா' உள்பட யோகிபாபு கதாநாயகனாக நடித்த படங்கள் வெற்றி அடைந்துள்ளது.

தற்போது `பூமர்அங்கிள்', `லக்கி மேன்' உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

புகழ்

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தவர் புகழ். பல படங்களில் காமெடி நடிகராக தன் பங்களிப்பை செய்து வந்த இவரைத் தேடி தற்போது கதாநாயகன் வாய்ப்புகள் ஏராளமாக வருகிறதாம். புகழும் அவசரப்படாமல் கதைகளை கேட்டு சம்மதம் சொல்லி வருகிறாராம். தற்போது `துடிக்கிறது மீசை' என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

முனிஷ்காந்த்

சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் வந்த முனிஷ்காந்துக்கு `முண்டாசுப்பட்டி' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தற்போது இவருக்கும் கதாநாயகன் வாய்ப்பு வரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் `காடப்புறா கலைக்குழு' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

சதீஷ்

குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் சதீஷ். நாயகனாக நடிக்க இவரைத் தேடியும் பல படங்கள் வரத் தொடங்கியுள்ளது. `நாய்சேகர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.

காளிவெங்கட்

காமெடி நடிகர் என்றில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ்பெற்றவர் காளி வெங்கட். இவரும் கதாநாயகனாக நடிக்கும் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கதையின் நாயகனாக நடித்த `கார்கி' வெற்றியடைந்தது.

காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. மக்களும் அவர்களை கதாநாயாகர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


Next Story