டி.எம்.எஸ். 100


டி.எம்.எஸ். 100
x
தினத்தந்தி 24 March 2023 9:13 AM GMT (Updated: 28 March 2023 5:44 AM GMT)

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விழா.

சின்னக்கலைவாணர் விவேக் பேசினார்.

"ஆண் குரலில் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆண்மை குரலில் ஒருவரால்தான் பாட முடியும். அவர்தான் டி.எம்.சவுந்தரராஜன்" என்றார்.

மென்மையான குரல்வளம்தான் எடுபடும் என்று சினிமா உலகில் நம்பப்பட்டதை ஒரு கணீர் குரல் தவிடு பொடியாக்கி, தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சியது.

பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான், அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது உருவத்துக்கும், குரலுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரியாது. ஆனால், அவரிடம் இருந்தா இப்படிப்பட்ட பாடல்கள், அழகிய தமிழ் உச்சரிப்புடன் வந்துள்ளன என இப்போது உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு வாயடைக்கிறார்கள்.

இன்று டி.எம்.சவுந்தரராஜனின் 100-வது பிறந்த நாள். அவரது நூற்றாண்டு விழாவை ரசிகர்கள் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரைப்பற்றி அரிய தகவல்களை இங்கே நாம் அசை போடலாம்.

5 வயதிலேயே பாடினார்

டி.எம்.சவுந்தரராஜன், மதுரையில் பிறந்தவர். தெற்கு கிருஷ்ணன்கோவில் பகுதியில் அவரது வீடு இருந்தது. சவுராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்தவர். 1923-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் தொகுளுவ மீனாட்சி அய்யங்கார்- தாயார் வேங்கடம்மாள். இவர்களுக்கு 2-வது மகனாக பிறந்தார்.

தந்தை கோவிலில் அர்ச்சகராக பணி செய்ததால், தன் 5 வயதில் இருந்தே கோவிலில், பஜனை பாடல்களை பாடினார்.

தொடக்கக்கல்வியை கீழவாசல் புனித மேரி பள்ளியிலும், அதன்பின்னர் 10-ம் வகுப்பு வரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சவுராஷ்டிரா பள்ளியிலும் பயின்றார்.

திருமணம்

படிக்கும் போதே கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் மேடைகளில் பாடி வந்தார்.

காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் முறையாக சங்கீதம் பயின்று, கச்சேரிகளிலும் பாட தொடங்கினார். அக்கால தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதரின் பாடல்களை, அவரைப்போலவே பாடி, மதுரை மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

சுமித்ரா என்பவரை, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1946-ம் ஆண்டு நடந்தது. அப்போது, டி.எம்.சவுந்தரராஜனுக்கு வயது 24.

டி.எம்.சவுந்தரராஜன்-சுமித்ரா தம்பதிக்கு பால்ராஜ், செல்வக்குமார் என்ற 2 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

பாகவதரின் பாராட்டு

மதுரையில் ஒருநாள் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அரங்கின் உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது. தியாகராஜ பாகவதரின் பாடல் அக்கம்பக்கம் வரை ஒலித்துக்கொண்டிருந்தது. வெளியில் இருந்தவர்கள் எல்லாம் தியாகராஜ பாகவதர்தான் கச்சேரியில் பாடுகிறார் என்று நம்பினர். சற்று நேரத்தில் ஒரு வாகனத்தில் வந்து தியாகராஜ பாகவதர் கீழே இறங்கினார். வெளியில் நின்ற மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தன் குரல் ஒலிப்பதை கேட்டு அவரும் ஆச்சரியம் அடைந்தார். தனது சாயலில் உச்சரிப்பு பிசகாமல் பாடுவது யார்? என்று அறியும் ஆவலில் அரங்கிற்குள் நுழைந்தார். ஒல்லியான தேகம் கொண்ட ஒரு வாலிபர் பாடுவதை அறிந்து, மேடை ஏறி அவரை பாராட்டினார். தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தவும் செய்தார். அந்த வாழ்த்தை பெற்றவர் டி.எம்.சவுந்தரராஜன்.

பாகவதரின் வாழ்த்து அவரை சினிமாவில் பாட தூண்டியது. அதற்காக முதலில் கோவை சென்றார். அங்கு ஒரு தியேட்டரில் சிறிது காலம் பணியாற்றினார்.

அக்காலத்தில் பிரபல திரைப்பட இயக்குனராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி என்பவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். 1946-ம் ஆண்டு சுந்தர்லால் நட்கர்னி இயக்கிய கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் நரசிம்ம பாரதி என்பவருக்கு பாடிய 'ராதே என்னை விட்டு போகாதடி' என்ற பாடல்தான் சினிமாவுக்காக டி.எம்.சவுந்தரராஜன் முதன்முதலாக பாடிய பாடல். ஆனால், அந்த படம் வெளிவந்தது 1950-ல்தான்.

இடைப்பட்ட காலத்தில் சேலம் மாடர்ன் தியேட்டருக்கு சென்று வாய்ப்பு தேடிய சமயத்தில், மந்திரி குமாரி படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபோல், தேவகி, வளையாபதி படங்களிலும் பாடினார்.

சேலத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் குடும்பத்தோடு சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.

திருப்புமுனை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான, `தூக்குத் தூக்கி' (1954) திரைப்படம் டி.எம்.சவுந்தரராஜனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை பெரும்பாலும் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் மட்டுமே சிவாஜிக்கு பாடி வந்தநிலையில், டி.எம்.சவுந்தரராஜன் அந்த படத்தில் சிவாஜிக்காக 5 பாடல்களை பாடி இருந்தார். இந்த பாடல்கள் வெற்றி பெற்றதுடன், சிவாஜியின் முகபாவனைகளுக்கு ஏற்றார்போல் உச்சரிப்புகள் இருந்ததாக பேசப்பட்டது.

அதன்பின்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி பட பாடல்களின் குரலாக டி.எம்.சவுந்தரராஜனின் சிம்மக்குரல் ஒலிக்கத்தொடங்கி புகழ் ஏணியில் ஏறத்தொடங்கினார்.

ரஜினி-கமல்



1960, 70-ம் ஆண்டுகளில் வெளியான பெரும்பாலான படங்களில் டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்கள் இடம்பிடித்தன.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமின்றி ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருக்கும், அதன்பின்பு சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாடிய பெருமை டி.எம்.சவுந்தரராஜனுக்கு உண்டு.

டி.எம்.எஸ். என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அந்த டி.எம்.எஸ்.-க்கு, தன் தந்தை பெயருடன் சேர்த்து தொகுளுவ மீனாட்சி சவுந்தரராஜன் என்பதே விரிவாக்கம் ஆகும். ஆனால், அதை டி.எம்.எஸ். பல இடங்களில் வேறு மாதிரியாக கூறி இருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் முதல் எழுத்து, டி.எம்.எஸ். என்ற இயல்பாக தனக்கு அமைந்தது இறைவன் கொடுத்த வரம் என்றும் கூறி இருக்கிறார்.

இந்திக்கு செல்ல மறுப்பு

பாலிவுட் திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான நவ்ஷாத், அவரை இந்தி படங்களுக்கு பாட பலமுறை அழைத்தும் `எனக்கு தமிழ் போதும்' என்று மறுத்தார். அவரின் இந்த முடிவை, இந்தி சினிமாவுக்கு பெரும் நஷ்டம் என்று கூறியவர், நவ்ஷாத்.

டி.எம்.எஸ். பாடலைக் கேட்டு இந்தி பாடகர் முகமது ரபி உருகிவிட்டார். டி.எம்.எஸ்.சின் தொண்டையை வருடி `இங்கிருந்துதானா அந்த கம்பீர குரல் வருகிறது?' என ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.

பிரபல இயக்குனரான பீம்சிங் இயக்கிய பா வரிசை படங்களுக்கு, டி.எம்.எஸ். இசை ராஜாங்கமே நடத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த பாடலையும், தேசிய கீதத்தையும், பி.சுசீலாவுடன் இணைந்து டி.எம்.எஸ். பாடிக்கொடுத்தார். அரசு விழாக்களில் அந்த பாடல்கள்தான் அக்காலத்தில் ஒலிபரப்பாகின.

இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்

டி.எம்.எஸ். பாடிய பல கச்சேரிகளில் இளையராஜா கீபோர்டு வாசித்து இருக்கிறார். கங்கை அமரன் கிதார் வாசித்துள்ளார்.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டி.எம்.எஸ். பாடியபோது, சிறுவன் ஒருவன் கீபோர்டு வாசித்தார். அந்த சிறுவனை அழைத்து, மோதிர கைகளால் டி.எம்.எஸ். கொட்டி வாழ்த்தினார். அவ்வாறு கொட்டு வாங்கிய சிறுவன் தான், ஏ.ஆர். ரகுமான்.

பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். ஆர்மோனியம் வாசிப்பதிலும், அருமையாக சமையல் செய்வதிலும் வல்லவர்.

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி விருதை (1974-75) பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் செம்மல் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 2003-ம் ஆண்டு பெற்றார். ஏழிசை மன்னர் பட்டத்தை மு.கருணாநிதியிடம் பெற்றார். அவரின் உற்ற நண்பராகவும் டி.எம்.எஸ். விளங்கினார்..

2002-ம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டார்.

தன்னுடைய 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடி இருக்கிறார்.

பாடல்களில் நளினம்




ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவரின் நெற்றி, விபூதியுடன்தான் எப்போதும் இருக்கும்.

முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார். முருகனைப் போற்றி அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பல நாடுகளுக்கு சென்று கச்சேரிகள் நடத்தி வெளிநாடுவாழ் தமிழர்களையும் மகிழ்வித்தார்.

காஞ்சி பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா மீதும் பக்தி கொண்டவர். `கற்பகவல்லி' பாடலை டி.எம்.சவுந்தரராஜனை பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த காஞ்சிப் பெரியவர், தான் போர்த்தியிருந்த சால்வையை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

பாடலின் பொருள் உணர்ந்து பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது பாடல்களில் நளினமும், ஏற்ற இறக்கமும் துல்லியமாக இருக்கும். அவரது நாவில் தமிழ் விளையாடியது என்றே கூறலாம்.

திருப்புகழை பாடும் வாய்ப்பு வந்தபோது, கிருபானந்த வாரியாரிடம் சென்று அந்த பாடல்களுக்கான பொருளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பாடினார்.

பாடகர் திலகம், சிம்ம குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், ஏழிசை மன்னர், குரலரசர், தெய்வ பாடகர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

உயர்ந்த மனிதன் திரைப்படத்தில், நாயகன் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற காட்சி அமைப்பு இருக்கும். பாடல், இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக, ஒலிப்பதிவு கூடத்தில் ஒடியபடி மூச்சிறைக்க அந்த பாடலை பாடிக்கொடுத்தாராம்.

மதுரையில் விழா



அவரது சாதனைைய பாராட்டி பல இடங்களில் விழாக்கள் எடுக்கப்பட்டன. அதில் அவரது சொந்த ஊரான மதுரையில் 2009-ம் ஆண்டு தமுக்கம் மைதானத்தில், அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் நடத்தப்பட்ட விழா முக்கியமானது.

தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டி.எம்.எஸ். தனது 91-வது வயதில் 25.5.2013 அன்று காலமானார்.

டி.எம்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது வீடு அமைந்துள்ள சென்னை மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு அவரின் பெயரை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரையிலும் டி.எம்.சவுந்தரராஜனுக்கு உருவச்சிலை நிறுவப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பரவசமூட்டும் பக்தி பாடல்கள்

சினிமா பாடல்களை போன்று பக்தர்களை பரவசமூட்ட வைத்த பக்தி பாடல்களிலும் டி.எம்.சவுந்தரராஜன் தந்திருக்கிறார். அதில் முருக பக்தி பாடல்களில் எல்லோரையும் தன் குரலால் உருக வைப்பார். அவற்றில் முக்கியமான பாடல்கள் என்றால் உள்ளம் உருகுதய்யா முருகா..., மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன், சொல்லாத நாள் இல்லை சுடர்மிகு வடிவேலா... போன்ற பாடல்களை குறிப்பிடலாம். அதே போல் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடலும் குறிப்பிடத்தக்கது.

திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் சிவாஜியின் நடிப்பும், டி.எம்.எஸ்-ன் குரலையும் கேட்ட ரசிகர்கள் அடைந்த பரவசத்துக்கு அளவே கிடையாது. ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் திருவருள் படத்தில் வரும் பாடல்களும் டி.எம்.சவுந்தரராஜனுக்கு அழியா புகழை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழக அரசுக்கு நன்றி




மற்றொரு மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் கூறுகையில், "இசைத்துறையில் யாரும் செய்ய முடியாத சாதனையை எங்களுடைய தந்தை செய்திருக்கிறார். அதனால்தான் அவரை தெய்வப்பாடகர் என ரசிகர்கள் அழைக்கிறார்கள். டி.எம்.எஸ். என்றாலே உழைப்புதான். அவரின் பாடல்களை நாங்கள் மேடையில் பாடுவதால், அந்த பாடல்களின் அருமை, பெருமைகள், பாடும்போது மேற்கொண்ட சிரமங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும். அவரது நூற்றாண்டு பிறந்த நாளில், அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு டி.எம்.எஸ். பெயரை வைத்தது எங்களுக்கு பெருமை.. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மதுரையில் அவரது சிலை திறப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காதல் பாடல், சோகப்பாடலுக்கு காரணமான பெண்கள்

காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், அதே நேரத்தில் காதல் தோல்வி என்றால் விரக்தியில் பாடுவது போன்றும் பாடுவது டி.எம்.எஸ்.-க்கு கைவந்த கலை.

இதற்கு இரு பெண்கள்தான் காரணம் என டி.எம்.எஸ். மகன் பால்ராஜ் சிலாகித்து கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

என்னுடைய தாயார் சுமித்ரா மீது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தனர். என் தந்தைக்காக தாயார் நிறைய தியாகங்களை செய்துள்ளார். எனவே அவர்களது காதல், அவரது பாடல்களில் எதிரொலிக்கும். அதே போல் சோகப்பாடலுக்கும் என் தந்தையின் வாழ்வில் வந்த ஒரு பெண்தான் காரணம். வாலிப வயதில் அந்த பெண்ணும், என் தந்தையும் காதலித்தனர். அந்த காதல் கைகூடாமல் போனதால், அந்த வருத்தம் தன்னை பாதித்ததாக என் தந்ைத கூற கேட்டு இருக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் சோகப்பாடலிலும் அவரை சாதிக்க வைத்து இருக்கிறது.

அந்த காலத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் ஏ.சி. வசதி கிடையாது. எங்கள் தந்தை பாடி முடித்து வியர்க்க விறுவிறுக்க வெளியே வருவார்.

பொது வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் இசையை தவிர வேறு எதிலும் அவர் ஆர்வம் காட்டியது இல்லை. ஆனால், நன்றாக சமைப்பார். நேரம் கிடைக்கும் போது எல்லாம். வீட்டில் உள்ளவர்களுக்கு வகை, வகையாக உணவு சமைத்து கொடுப்பார். கேரம் விளையாடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரால் நானும் புகழ்பெற்றேன்! -பி.சுசீலா



உலகம் உள்ளவரை அவரது பாடல்கள் என்றுமே அழியாது. அப்படி வாழ்ந்து காட்டியவர், டி.எம்.சவுந்தரராஜன். 90 வயது வரை அவர் பாடிக்கொண்டு இருந்தார். அவருக்கு அவரேதான் போட்டி. அவரைப் போல ஒரு பாடகர் இனி சினிமாவில் பிறக்கமுடியாது. அந்த வெண்கலக் குரலைப் போல ஒரு குரல் இனி வரமுடியாது. உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். டி.எம்.எஸ். என்ற 3 எழுத்தில் தமிழ் மறைந்திருக்கிறது.

அவர் அருகே நின்று பாடும்போது, நமக்கே பாடல் வரிகள் மறந்துபோகும் அளவுக்கு ஸ்வரத்தில் விளையாடி விடுவார். அவருடன் இணைந்து பாடிய பாடல்கள் மறக்க முடியாத அனுபவமே. அவரால் நானும் புகழ்பெற்றேன்.

அவர் நம்மிடம் இல்லை என்பதை இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை. நல்ல பாடகரும், நல்ல மனிதருமான அவரை சினிமாவில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் பிரிக்கவே முடியாது. இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்காத அவரை ரசிகர்கள் எப்போதும் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.

இசை உலக மேதை! - எஸ்.ஜானகி



டி.எம்.எஸ். ஒரு ஞானி என்பேன். இசையுலகில் தனித்தன்மை மிக்கவர். அவருடன் பாடுவது என்றாலே மிகவும் பிடிக்கும். கே.வி.மகாதேவன் இசையில் ` நீலநிறம் வானுக்கும் கடலுக்கும்...' என்ற பாடலை அவருடன் பாடியது எனக்கு மறக்கவே முடியாது. பாடும்போதே அவர் காட்டிய நளினமும், குரல் திறனும் என் கண்ணில் அப்படியே இருக்கிறது. மேடைப் பாடல்களிலும் அவர் நளினம் காட்டி அசத்துவார்.

ஆன்மிகத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் பாடிய முருகன் பாடல்களை கேட்டாலே உடல் சிலிர்ப்பதை உணரமுடியும். நல்ல கலைஞனுக்கு திறமை இருக்கும். திறமையுடன், நல்ல எண்ணங்களும் கொண்ட ஒரு ஆன்மிகவாதியை பார்க்கவே முடியாது. அப்படி இருந்தால் அது டி.எம்.எஸ். ஆகவே இருக்கும். அவருடன் பாடிய அனுபவம் நல்ல அனுபவம் ஆகும். இசையமைப்பாளர்கள் எப்படி சொல்கிறார்களோ, அதைவிட சிறப்பாக பாடி அசத்துவார். பி.சுசீலாவுடன் அவர் பாடிய `முல்லை மலர் மேலே... மொய்க்கும் வண்டு போலே...' என்ற பாடலெல்லாம் எத்தனை முறை கேட்டாலும், 'அப்பப்பா...' என்று எண்ண தோன்றும். இசையுலகின் சிறந்த மேதை அவர். அவர் காலத்தில் நாங்களும் அடையாளம் பெற்றது இறைவன் தந்த பாக்கியம். அவருக்கு கிடைத்த விருதுகள் ஏராளம். ஆனாலும், அதை விட ரசிகர்கள் உள்ளத்தில் என்றென்றும் குடியிருப்பதே எந்த கலைஞனும் இன்றுவரை பெறாத விருது. அது கடவுள் அவருக்கு தந்த கொடுப்பினை.

அவருக்கு நிகர் அவரே! - எல்.ஆர்.ஈஸ்வரி



சினிமாவில் ஹை-பிச்சில் பாடக்கூடியவர் என்று என்னை பலர் சொல்வது உண்டு. ஆனால் எனக்கே சவால் விடும் வகையில் குரலில் வித்தையும், ஆச்சரியமும்தரும் வித்தகர் டி.எம்.எஸ். உயிரைக் கொடுத்துப் பாடும் கலைஞர் என்றால் அது அவர் மட்டும்தான். பாடலுக்காக அவர் எதை வேண்டுமென்றாலும் செய்வார்.

அவர் ஒரு பெரிய மேதை. அவர் காலத்தில் நானும் பாடகியாக இருந்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அனைத்து இசையமைப்பாளர்களும் `வாருங்கள்... வாருங்கள்...' என்று அவரை அழைத்துப் பாடவைத்த காலம் இருந்தது. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அவரைப் போன்ற மனிதநேயமிக்க மனிதரை இனி பார்க்கவே முடியாது. டி.எம்.சவுந்தரராஜனுக்கு நிகர் அவரே தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அவர் பாடியிருக்கிறார். இப்போதும் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது புகழ் எங்கும் பரவி இருக்கிறது. நல்ல, நேர்மையான மனிதர் அவர். நான் அவர் தங்கை என்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை. என் மீது அவர் அதிக பாசம் வைத்திருந்தார். அவர் வாழ்ந்த காலம் இசை உலகின் பொற்காலம். அவரது புகழ் பூமி உள்ளவரை நிலைத்திருக்கும். கடவுள் கொடுத்த பாக்கியம் அவர். அவரைப் போல தலைக்கனம் இல்லாத பாடகரை இனி காண்பது அரிது.


Next Story