ரூ.100 கோடி வசூலில் இணைந்த உன்னிமுகுந்தன்


ரூ.100 கோடி வசூலில் இணைந்த உன்னிமுகுந்தன்
x

மலையாளத்தில் இருந்து வெளியாகி ரூ.100 கோடியை வசூலித்த மூன்றாவது திரைப்படமாக ‘மாளிகாப்புரம்’ மாறியிருக்கிறது. அதன் மூலம் படத்தின் நாயகனான உன்னிமுகுந்தன் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மலையாள சினிமாவின் வரலாறு, 1930-ம் ஆண்டு வெளியான 'விகதகுமாரன்' என்ற ஊமைப் படத்தில் இருந்து தொடங்குகிறது. இதனை ஜே.சி.டேனியல் என்பவர் இயக்கியிருந்தார். இவர்தான் 'மலையாள சினிமாவின் தந்தை' என்று அறியப்படுகிறார்.

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவில், வர்த்தகம் குறைவுதான். எனவே அங்கு குறைவான செலவில் படத்தை எடுத்து வெளியிடுவார்கள். மலையாள நடிகர்களுக்கு, தமிழ், தெலுங்கு, இந்தி போன்று பல கோடி என்று கொட்டிக்கொடுக்கும் வழக்கம் அங்கு இல்லை.

இருப்பினும் தரமான கதை, திரைக்கதை, திறமையான நடிகர்- நடிகைகளின் காரணமாக, அங்குள்ள படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்றன. பெரிய பட்ஜெட், பெரிய விளம்பரங்கள் இல்லாததால், மலையாள சினிமா பெரிய அளவில் லாபம் ஈட்டுவது கடினமான விஷயமாகவே இருந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் மொத்த படங்களில், வருடத்திற்கு 4 படங்களாவது ரூ.100 கோடிக்கு மேல் சாதாரணமாக ஈட்டுகின்றன. அதுவே ரஜினி, விஜய், அஜித், சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு போன்ற பெரிய ஹீரோக்கள் பிற மொழி நடிகர்களின் படங்கள் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகும் என்பதையே எளிதாக்கிவிட்டன.

ஆனால் மலையாள சினிமாவில் 40, 50 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட ரூ.100 கோடி என்ற இலக்கை எட்ட சிரமப்படுகின்றன. அந்த வகையில் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவில் இதுவரை 2 படங்கள்தான் ரூ.100 கோடி என்ற வசூல் சாதனையை கடந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு வெளியான 'புலிமுருகன்', 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' என்ற அந்த இரண்டு படங்களின் ரூ.100 கோடி வசூல் சாதனையும், மோகன்லால் வசம் சென்றுவிட்டது. பல தேசிய விருதுகளைப் பெற்ற மம்முட்டிக்கு கூட, அந்த வசூல் சாதனை சொந்தமாகவில்லை.

இந்த நிலையில் மலையாளத்தில் ரூ.100 கோடி வசூல் சாதனை என்ற இலக்கை மூன்றாவது திரைப்படமாக 'மாளிகாப்புரம்' எட்டியிருக்கிறது. இது ஒரு ஆன்மிகப் படம் ஆகும். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை, பக்திப் படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மவுசும் இல்லை என்பதே உண்மை. இடையில் வெளியிடபட்ட பல பக்தி படங்களும் கூட ரசிகர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பெரிய அளவில் வசூல் சாதனையும் நடத்தவில்லை. இந்த நிலையில் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியானது 'மாளிகாப்புரம்' திரைப்படம். இது சபரிமலை ஐயப்பனின் தெய்வீகத்தை உணரச் செய்யும் வகையிலான பக்தி படம் ஆகும்.

இந்தப் படத்தில் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகரான உன்னிமுகுந்தன் நாயகனாக நடித்திருந்தார். சபரிமலை செல்ல ஆசைப்படும் ஒரு சிறுமி, தன் தோழனுடன் சபரிமலை பயணிக்கிறாள். காட்டு வழியே சபரிமலை நோக்கி பயணிக்கும் அந்த சிறுமிக்கு நேரும் பயங்கரமான ஆபத்தில் இருந்து ஐயப்பனின் அருளாசியுடன் நாயகன், சிறுமியை எப்படி பாதுகாக்கிறார் என்பதே கதை. பட அறிவிப்பு வெளியானது முதல் அடுத்த 4 மாதங்களில் 'மாளிகாப்புரம்' படம் திரைக்கு வந்து விட்டது.

படம் வெளியாவதற்கு முன்பான டிரெய்லரிலேயே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம், படம் வெளியான நேரம் என்று சொல்லலாம். ஏனெனில் படம் வெளியான டிசம்பர் மாதத்தில்தான் இந்தியா முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்த காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐயப்ப பக்தர்களை குறிவைத்து வெளியிடப்பட்ட இந்தப் படம், மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழியிலும் வெளியிடப்பட்டு நல்ல வசூல் பார்த்துள்ளது. விரைவில் இந்தியில் வெளியிட இருக்கிறார்கள்.

ரூ.3½ கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ரூ.100 கோடியை வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் மலையாளத்தில் இருந்து வெளியாகி ரூ.100 கோடியை வசூலித்த மூன்றாவது திரைப்படமாக 'மாளிகாப்புரம்' மாறியிருக்கிறது. அதன் மூலம் படத்தின் நாயகனான உன்னிமுகுந்தன் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில், "எங்கள் படத்திற்கு ஆதரவும் அன்பும் தந்த அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. 'மாளிகாப்புரம்' திரைப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story