சந்திரயான்-2 தவறில் இருந்து பாடம் கற்று தற்போது வெற்றி பெற்றிருக்கிறோம்-இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி


சந்திரயான்-2 தவறில் இருந்து பாடம் கற்று தற்போது வெற்றி பெற்றிருக்கிறோம்-இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
x
தினத்தந்தி 24 Aug 2023 4:59 PM GMT (Updated: 25 Aug 2023 5:02 AM GMT)

லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வந்த பிறகே நள்ளிரவில் வீட்டிற்கு சென்றேன் என்றும், சந்திரயான்-3 தவறில் இருந்து பாடம் கற்று தற்போது வெற்றி பெற்றிருக்கிறோம் என்றும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

பெங்களூரு:-

சிவன் பேட்டி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கியது. அந்த விண்கலம் நேற்று முன்தினம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதை பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கட்டளையிட்டு செயல்படுத்தினர்.

அந்த சமயத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அங்கு இருந்தார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதும் அவர் விஞ்ஞானிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அங்கிருந்தபடி அவர் நிலவில் விக்ரம் லேண்டர், ரோவரின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு வைத்து நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நள்ளிரவில் தான் வீட்டுக்கு சென்றோம்

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பிறகு உடனே நாங்கள் வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரையை தொட்ட பிறகே நள்ளிரவில் வீட்டிற்கு சென்றோம்.

அதுவரை நான் அந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்திலேயே அமர்ந்திருந்தேன். சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட சிறு தவறால் நாம் அப்போது வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

மிகுந்த மகிழ்ச்சி

இல்லாவிட்டால் 4 ஆண்டுகளுக்கு முன்பே நிலவில் நாம் காலடி எடுத்து வைத்திருப்போம். தவறில் இருந்து பாடம் கற்று அதை திருத்திக்கொண்டு வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த முறை விண்ணில் ஏவப்படும் விண்கலத்தில் எந்த தவறும் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் மிகுந்த கவனத்துடன் சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியின் பலனை நேற்று கண்டோம்.

இவ்வாறு சிவன் கூறினார்.


Next Story