குவியும் புகார்கள்..! பதறும் நடிகர்..!


குவியும் புகார்கள்..! பதறும் நடிகர்..!
x
தினத்தந்தி 21 Oct 2017 5:07 AM GMT (Updated: 21 Oct 2017 5:07 AM GMT)

சமீபத்தில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஹார்வே வெயின்ஸ்டின் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.

ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் மீது ஹாலிவுட் நடிகைகள் பலரும் புகார் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஹார்வே வெயின்ஸ்டின் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால், அவரை பலரும் ஒதுக்க தொடங்கியுள்ளனர். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 25 வருடங்கள் வரை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் மீதும் பாலியல் புகார் குவிய தொடங்கியிருக்கிறது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மார்பில் அவர் கை வைத்தார்” என பிரபல நடிகை ஹிலாரி பர்டன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவரிடம் பென் அப்லெக் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் படங்களில் மேக்கப் கலைஞராக பணிபுரியும் அன்னாமேரி டெண்ட்லர் என்பவரும் பென் அப்லெக் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

“2014-ம் ஆண்டு நடந்த ஒரு பார்ட்டியில் பென் என்னுடைய பின் அழகில் கை வைத்தார். அதற்காக அவர் என்னிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டிவிட்’ செய்துள்ளார். மேலும், “பல பெண்களை போல், அந்த சூழ்நிலையில் நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அவரை நேரில் பார்த்தால் அவரிடம் நிறைய கேட்க வேண்டும்” என்று தான் நினைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி பாலியல் புகார்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், அவர் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறார். 

Next Story