லூசிபர் 2-ம் பாகத்தில் சஞ்சய்தத்


லூசிபர் 2-ம் பாகத்தில் சஞ்சய்தத்
x
தினத்தந்தி 1 Nov 2019 1:18 PM GMT (Updated: 1 Nov 2019 1:18 PM GMT)

மலையாளத்தின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் முதன் முறையாக இயக்கிய திரைப்படம் ‘லூசிபர்.’ இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார்.

கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, திறமையான இயக்குனர் என்ற வகையிலும் தன்னை நிரூபித்துக் கொண்டார், பிருத்விராஜ். இந்தப் படம் பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. 

மலையாள சினிமாவில் ரூ.200 கோடி வசூலை எட்டிய முதல் திரைப் படம் என்ற வகையில் இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்களிடம் கேள்வி இருந்து வந்தது. ஒரு சில மேடைகளில், இரண்டாம் பாகம் வெளிவரும் என்பதாகவே பிருத்விராஜின் பேச்சும் இருந்தது. இதனால் ரசிகர்களிடம் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ‘எம்புரான்’ என்ற பெயரில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், நடிகர் மோகன்லாலை சந்தித்து பேசியுள்ளார். அந்தப் புகைப்படத்தை மோகன்லால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பல கேள்விகளுக்கு வித்திடுவதாக அமைந்திருக்கிறது. ‘லூசிபர்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் அதன் இரண்டாம் பாகத்திலும், சஞ்சய் தத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதே ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விடுத்திருக்கும் கேள்வி. இதற்கான விடையை பிருத்விராஜ்தான் சொல்ல வேண்டும்.

Next Story