பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜய்யுடன் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலுடன் பூஜை, சக்தியின் ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தார். ராம் கோபால் வர்மா இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கைதி நம்பர் 150, ரேஸ் குர்ரம், அட்டாக், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், போக்கிரி, நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டனா உள்ளிட்டவை நர்சிங் யாதவ் நடித்த முக்கிய தெலுங்கு படங்கள். இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அனைத்து மொழிகளிலும் 300 படங்களில் நடித்துள்ளார்.
நர்சிங் யாதவுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பிரச்சினையும் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நர்சிங் யாதவ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. மறைந்த நர்சிங் யாதவுக்கு சித்ரா என்ற மனைவியும் ருத்விக் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக நிவாசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.