சமந்தாவுக்கு எதிர்ப்பு

நடிகை சமந்தா இந்தியில் தயாராகும் பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் முதல்பாகம் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இரண்டாம் பாகத்திலும் இருவரும் நடிக்கிறார்கள். சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ராஜ், டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர். சமந்தா மனித வெடிகுண்டாக நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. “பேமிலிமேன் 2 தொடரில் நான் பல விதிகளை உடைத்து இருக்கிறேன். என்னை குறிப்பிட்ட வேடத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் ஆச்சரியப்படுவார்கள்’’ என்று சமந்தாவும் தனது கதாபாத்திரம் பற்றி பேசி இருந்தார்.
இந்த நிலையில் பேமிலிமேன் 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.சமந்தாவின் கதாபாத்திரத்துக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமந்தாவையும் தொடரையும் விமர்சித்து பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story