பாலிவுட் நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா சோனார்


பாலிவுட் நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா சோனார்
x
தினத்தந்தி 23 May 2021 5:12 PM GMT (Updated: 23 May 2021 5:12 PM GMT)

ஹாலிவுட் மட்டுமின்றி, கோலிவுட் ரசிகர்களாலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாக மாறியிருக்கிறது,

 ‘தி கிரே மேன்’ திரைப்படம். அதற்கு முக்கிய காரணம், இந்தப் படத்தை ‘அவென்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவென்சர்ஸ்: என்ட்கேம்’ திரைப்படங்களை இயக்கிய ஆண்டனி ரஸோ, ஜோய் ரஸோ இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். மேலும் அவென்சர்ஸ் திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்-நடிகைகள் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். அதோடு கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதற்காக பல மாதங்களாக அவர், அமெரிக்காவிலேயே தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.

‘தி கிரே மேன்’, 2009-ம் ஆண்டு மார்க் கிரேனி என்பவர் எழுதி வெளியான நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும், அதிரடி திரில்லர் படமாகும். தற்போது இந்தப் படத்தில் மற்றொரு இந்திய நடிகை ஒருவரும் இணைந்திருக்கிறார். அவர் அந்தப் படக்குழுவோடு இணைந்து பல மாதங்களாக பயணித்து வந்த போதிலும் கூட, இந்தத் தகவல் சமீபத்தில்தான் தெரியவந்திருக்கிறது. இது பாலிவுட்டில் பல நட்சத்திரங்களின் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது. அவர்களின் ஆச்சரியங்களுக்கு அடையாளமாக நிற்பவர், ‘ஐஸ்வர்யா சோனார்’.

இவர் 2016-ம் ஆண்டுதான், சினிமாத் துறைக்குள் காலெடுத்து வைத்துள்ளார். அதற்குள்ளாகவே அவருக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்திருப்பதுதான், பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஐஸ்வர்யா சோனார், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர். ஆனால் இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது தென்னிந்தியாவில் என்று சொல்லப்படுகிறது. அதுபற்றிய முழுமையான தகவல் இல்லை. தற்போது 30 வயதுக்கு நெருக்கமாக இருக்கும் ஐஸ்வர்யா சோனார், 2016-ம் ஆண்டு ‘வெண்டிலேட்டர்’ என்ற மராத்திய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்தப் படத்தை தயாரித்தவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஆவார்.

அந்தப் படம் மூலமாக ஏற்பட்ட நட்பு காரணமாக, 2017-ம் ஆண்டு தான் தயாரித்த மற்றொரு மராத்திய படமான ‘காய் ரே ராஸ்கலா’ என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை, ஐஸ்வர்யா சோனாருக்கு, பிரியங்கா சோப்ரா வழங்கினார். இதுதான் ஐஸ்வர்யா சோனார், ரசிகர்களுக்கு அறிமுகமான முதல் திரைப்படம். இதுவரை அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஒரே ஒரு சினிமா இதுதான். ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி தொடர், குறும்படம் என்று தன்னை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். மேலும் சில குறும்படங்களை தயாரித்து வருகிறார். ஒரு குறும்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இப்படி பன்முகத் தன்மை கொண்டவராக தன்னை வளர்த்து வருகிறார், ஐஸ்வர்யா சோனார்.

இவருக்கு தற்போது கிடைத்திருக்கும் ஹாலிவுட் வாய்ப்பு, பல மாதங்களுக்கு முன்பே கிடைத்திருக்கிறது. அப்போது ‘தி கிரே மேன்’ படக்குழுவினர், இணையத்தின் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரால் நம்ப முடியவில்லையாம். ‘ஏதோ தவறுதலாக நம்மை அணுகியிருப்பார்கள்’ என்று கூட நினைத்தாராம். ஆனால் ஒரு நாள், மீண்டும் இணையத்தில் தொடர்பு கொண்டு, மும்பையிலேயே நடிப்பதற்கான முதல்கட்ட தேர்வை நடத்தியிருக்கிறார்கள்.

கொரோனாவால் உலகமே அல்லாடிக்கொண்டிருக்கும் காலகட்டம் என்பதால், ‘இது சாத்தியமாகுமா?’ என்ற எண்ணத்திலேயே இருந்திருக்கிறார், ஐஸ்வர்யா சோனார். ‘தி கிரே மேன்’ படத்தில் அவர் மிகச் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார் என்றாலும், அதற்காக அந்தப் படக்குழுவோடு இணைந்து 6 மாத காலம் நடிப்பு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

“நான் எப்போதும் அமைதியை நாடுபவள். அதனால் இந்தப் படத்தில் நடிக்க என்னை முதலில் தொடர்பு கொண்டபோது, எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இல்லை. சில படங்கள் நம்மை தேடி வரும். சில நாட்கள் படப்பிடிப்பு கூட நடக்கும். ஆனால் படம் வெளியாகாமல் போய்விடும். அதனால் ‘தி கிரே மேன்’ பட வாய்ப்பு வந்தபோது, அதில் நான் நடிக்கிறேன் என்ற எண்ணத்தை, என் மனதிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடைய முதல் படமான ‘காய் ரே ராஸ்கலா’வில் நடிக்க பிரியங்கா சோப்ரா என்னை அணுகியபோது கூட என்னுடைய மன ஓட்டம் அதுவாகத்தான் இருந்தது. ‘தி கிரே மேன்’ படத்துக்காக 6 மாதம் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டபோதும் என் மனதை நான் கட்டுக்குள்தான் வைத்திருந்தேன். ஆனால் இறுதியாக நான் அந்தப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். நான் அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்தின் இயக்குனர்கள், நடிகர்-நடிகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காத தாராள மனம் படைத்தவர்கள். அந்தப் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தனுஷ் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படம் வெளியாகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார், ஐஸ்வர்யா சோனார்.

‘இந்திய சினிமாவில் நுழைந்து ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் இந்தி படம் கூட கிடையாது. அவருக்கு எப்படி இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது’ என்பதே, பல ஆண்டுகளாக ஹாலிவுட் கனவில் மிதந்து வரும் பாலிவுட் நடிகைகள் பலரின் எண்ணமாக இருக்கிறது.

Next Story