நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்


நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 13 Sep 2021 2:10 PM GMT (Updated: 13 Sep 2021 2:10 PM GMT)

அண்ணாத்த படத்தின் போஸ்டர் கொண்டாட்டத்தில் ஆட்டை வெட்டும் வீடியோ ஒன்றை வைரலாகி வருவதால் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொதுமக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

மேலும் மிருகவதையும் அடங்கும், கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில் கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள், ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Next Story