நடிகராகவும் முத்திரை பதிக்கும் பாடகர் வேல்முருகன்


நடிகராகவும் முத்திரை பதிக்கும் பாடகர் வேல்முருகன்
x
தினத்தந்தி 28 Sep 2021 3:43 PM GMT (Updated: 28 Sep 2021 3:43 PM GMT)

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார்.

கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார். மதுர குலுங்க குலுங்க, ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், அட கருப்பு நிறத்தழகி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.  

இது மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு. கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடிப்பில் வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

ப்ரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன், படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

“இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. எனது குரலை ஏற்றுக்கொண்டதுப் போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வேல்முருகன் கூறுகிறார்.

Next Story