ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் கௌரி கிஷன், அனகா


ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் கௌரி கிஷன், அனகா
x
தினத்தந்தி 23 Nov 2021 5:43 PM GMT (Updated: 23 Nov 2021 5:43 PM GMT)

கௌரி கிஷன் அனகா நடிப்பில் ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

96, மாஸ்டர், கர்ணன், படங்களில் நடித்த கௌரி கிஷனும், நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நடித்த அனகாவும் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள இந்த மகிழினி ஆல்பம் சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.

மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம்.

சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை மகிழினி காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை இந்த ஆல்பத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

Next Story