எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் - மகேஷ் பாபு உருக்கம்


எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் - மகேஷ் பாபு உருக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2022 6:17 PM GMT (Updated: 10 Jan 2022 6:17 PM GMT)

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய அண்ணன் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான ரமேஷ் பாபு காலமானார். இவர் 1974ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமா ராஜு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து அதன்பிறகு தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்தார். இவருடைய தயாரிப்பில் மகேஷ் பாபு நடித்து வெளியான அர்ஜுன், அதிதி ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரமேஷ் பாபு நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (ஜன 08) ரமேஷ் பாபு(வயது 56) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருடைய தம்பி மகேஷ் பாபு உருக்கமான பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நீங்கள்தான் எனக்கு உத்வேகமாக இருந்தீர்கள், என்னுடைய பலமாக இருந்தீர்கள், என்னுடைய தைரியமாக இருந்தீர்கள். எனக்கு எல்லாமுமாக இருந்தீர்கள். நீங்கள் இல்லையென்றால், நான் இன்று இருப்பதில் பாதியாகக் கூட இருந்திருக்க மாட்டேன். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இப்போது ஓய்வெடுங்கள். இந்த வாழ்க்கை தவிர்த்து, எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் என் ‘அண்ணய்யா’  என மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Next Story