ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்


ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
x
தினத்தந்தி 16 Aug 2017 12:48 PM IST (Updated: 9 Feb 2018 9:59 PM IST)
t-max-icont-min-icon

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் இணைந்தார், காயத்ரி! ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், காயத்ரி.

 அந்த படத்தில் இவர், விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து இருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து விஜய் சேதுபதியும், காயத்ரியும் ராசியான ஜோடியாக கருதப்பட்டார்கள். இருவரும், ‘மெல்லிசை’ என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார்கள். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்த நிலையில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் நிகாரிகா நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம், இது. படத்தை டைரக்டு செய்பவர், ஆறுமுககுமார். இவர் கூறியதாவது:-

“இது, சாகசங்கள் நிறைந்த நகைச்சுவை படம். இதில், மலைவாசிகளின் தலைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். நிகாரிகா, கல்லூரி மாணவி. காயத்ரி, மலைவாசி பெண். மூன்று பேருக்கும் இடையேயான முக்கோண காதல் கதை இது. காயத்ரி மிக சிறந்த நடிகை. அவருடைய திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிடைக்கவில்லை என்பது என் கருத்து. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ அவருக்கு ராசியான படமாக அமையும். இந்த கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும்.

இன்னொரு முக்கிய வேடத்தில், கவுதம் கார்த்திக் நடிக்கிறார். ‘ரங்கூன்,’ ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களுக்கு பிறகு இவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தலக்கோணம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருக்கிறது.”
1 More update

Next Story