தேவ்


தேவ்
x
தினத்தந்தி 10 Nov 2018 7:30 AM GMT (Updated: 17 Dec 2018 6:56 PM GMT)

கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

‘தேவ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் படத்தை இயக்கும் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:-

கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சி அமைப்புகளையும் பார்த்ததுமே இளம் பெண்களை காதல்வசப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலுடன் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான்? என்பதையும் விளக்கும் படம், இது.

இதில், கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்று இல்லாமல், கார்த்திக்கு இணையாக இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ், ரகுல் ப்ரீத்சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.லட்சுமண் தயாரிக்கிறார்.”

குலுமணாலியில் மீண்டும் படப்பிடிப்பு கார்த்தி நடிக்கும் முதல் திகில் படம்

கார்த்தி தற்போது, ‘தேவ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது, ஒரு திகில் படம். அவர் நடிக்கும் முதல் திகில் படம், இது. இதில், அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். அறிமுக டைரக்டர் ரஜத் ரவிஷங்கர் டைரக்டு செய்கிறார். ‘தேவ்’ படத்தை பற்றி டைரக்டர் ரஜத் ரவிஷங்கர் கூறியதாவது:-

“இது, அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட திகில் படம். பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. கார்த்தி, ரகுல் பிரீத்சிங் ஜோடியுடன் படக்குழுவினர் அனைவரும் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் குலுமணாலி செல்கிறோம். ஏற்கனவே படக்குழுவினர் அனைவரும் குலுமணாலிக்கு செல்லும் வழியில், கனமழை-வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்பி வந்து விட்டோம்.

அங்கே எடுக்க முடியாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க இருக்கிறோம். படத்தில் இடம் பெறும் கார் துரத்தல் மற்றும் ஒரு சண்டை காட்சியை குலுமணாலியில் படமாக்குகிறோம். அங்கே தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அத்துடன் படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும். உலகிலேயே மிக உயரமான மலைப்பகுதியில், சில காட்சிகளை ஏற்கனவே படமாக்கியுள்ளோம். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங் களிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். எஸ்.லட்சுமண் தயாரிக்கிறார். படத்தின் ‘டப்பிங்’ மற்றும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகின்றன.”

சண்டை-திகில் கலந்த படத்தில் கார்த்தியுடன் கைகோர்க்கிறார், ‘மாநகரம்’ டைரக்டர்


‘ப ருத்தி வீரன்’ படத்தில் அறிமுகமான கார்த்தி இதுவரை 17 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 17-வது படம், ‘தேவ்.’ இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கும் 18-வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் ஆகிய 2 பட நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘மாநகரம்’ படத்தை இயக்கி அனைவராலும் பாராட்டப்பட்ட லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் கார்த்தியுடன் கைகோர்க்கிறார். இதில், கதாநாயகி கிடையாது.

‘சித்திரம் பேசுதடி,’ ‘அஞ்சாதே’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நரேன், ரமணா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பயங்கர சண்டை காட்சிகளும், திகில் காட்சிகளும் நிறைந்த படம், இது. சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார்.

எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகிய 3 பேரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Next Story