கத்திசண்டை


கத்திசண்டை
x
தினத்தந்தி 26 Dec 2016 4:49 PM GMT (Updated: 26 Dec 2016 4:49 PM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: விஷால்-தமன்னா டைரக்‌ஷன்: சுராஜ் கதையின்கரு: கருப்பு பணத்தை மீட்டு கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தும் இளைஞர். மந்திரியும் எம்.எல்.ஏவும் கருப்

கதாநாயகன்-கதாநாயகி:

விஷால்-தமன்னா

டைரக்‌ஷன்: சுராஜ்

கதையின்கரு: கருப்பு பணத்தை மீட்டு கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தும் இளைஞர்.

மந்திரியும் எம்.எல்.ஏவும் கருப்பு பணத்தை பதுக்க கடத்துகின்றனர். அதை போலீஸ் துணை கமிஷனர் ஜெகபதிபாபு மடக்கி ஐம்பது கோடி ரூபாய்யை அரசிடம் சேர்த்து நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்குகிறார். அவரது தங்கை தமன்னா மீது விஷாலுக்கு காதல். முதலில் விஷாலை வெறுக்கும் தமன்னா பிறகு காதலை ஏற்கிறார். அவர்கள் காதல் விவகாரம் ஜெகபதி பாபுவுக்கு தெரிய ரவுடிகளையும் போலீசாரையும் ஏவி விஷாலை அடித்து நொறுக்குகிறார். விஷால் காதலில் உறுதியாக இருக்க- திருமணத்துக்கு சம்மதிக்கிறார். அப்போது கருப்பு பணம் கடத்தி கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட வில்லன் அடியாட்களை அனுப்பி ஜெகபதிபாபுவை கடத்துகிறான்.

ரவுடிகளிடம் இருந்து அவரை மீட்கும் விஷால் தான் ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று சொல்லி அதிர வைக்கிறார். கருப்பு பணம் மூன்னூறு கோடியில் ஐம்பது கோடியை அரசிடம் சேர்த்து விட்டு மீதி 250 கோடியை ஜெகபதிபாபு பதுக்கியதாகவும் அதை கண்டுபிடிக்கவே தமன்னாவை காதலிப்பதுபோல் நடித்ததாகவும் கூறி, ஜெகபதிபாபு வீட்டில் சோதனை போட்டு அந்த தொகையை கைப்பற்றி மாயமாகிறார்.

ஆனால் அவர் உண்மையில் சி.பி.ஐ. அதிகாரி இல்லை என்பதும் ஜெயிலில் இருந்தவர் என்றும் தெரிய வர-மேலும் அதிர்ச்சி. விஷால் யார்? கருப்பு பணத்தை என்ன செய்தார்? என்பது மீதி கதை.

முகவரி சொல்ல மறுத்தவனை பந்தாடி அதிரடியாக அறிமுகமாகிறார் விஷால். தமன்னாவை முன்ஜென்ம காதலி என்பதும் அதை நம்ப வைக்க சூரியை அனுப்பி கல்வெட்டில் காதல் கவிதைகளை கிறுக்க வைப்பதும் கலகலப்பு. சி.பி.ஐ. அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்தி ஜெகபதிபாபு பங்களாவின் சுவர், கழிவறைகளை உடைத்து பணக்கட்டுகளை அள்ளுவது பரபரக்க வைக்கின்றன. விபத்தில் பழைய ஞாபகங்கள் மறந்து போனதாக நடிப்பதும் அவரை குணப்படுத்த வரும் வடிவேலை அடித்து இம்சிப்பதும் ரகளை. அதிரடியிலும் வேகம்.

தமன்னா அரைகுறையாக கவர்ச்சி விருந்தளிக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜெகபதிபாபுவின் இன்னொரு முகம் திடுக். மனோதத்துவ மருத்துவர் பூத்ரியாக வரும் வடிவேல் தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறார். ஜெயிலில் தீவிரவாதியிடம் உதைப்பட்டு குண்டு வைத்துள்ள இடங்களை அறிவது குலுங்க வைக்கிறது. போலி ரவுடியாக சுற்றி வரும் சூரி, சிரிக்க வைக்கிறார்.

மந்திரியாக வரும் ஜெயபிரகாஷ், எம்.எல்.ஏவாக வரும் தென்னவன், வில்லனாக வரும் தருண் அரோரா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. வில்லன் ஏரியா பலகீனமாக இருப்பது குறை. சமூக பிரச்சினையை கருவாக வைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் கலகலப்பும் விறுவிறுப்புமாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சுராஜ். கிளைமாக்ஸ் நிமிர வைக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ரிச்சர்ட் எம்.நாதன் கேமரா சேசிங் காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறது.

Next Story