பலே வெள்ளையத்தேவா


பலே வெள்ளையத்தேவா
x
தினத்தந்தி 26 Dec 2016 4:56 PM GMT (Updated: 26 Dec 2016 4:56 PM GMT)

கதாநாயகன்–கதாநாயகி: சசிகுமார்–தான்யா. டைரக்ஷன்: பி.சோலை பிரகாஷ். கதையின் கரு: காதல் ஜோடிக்கு உதவும் வயதான தம்பதிகள். வயலூர் கிராமத்துக்கு தபால் அதிகாரியாக வருகிறார், ரோகிணி. இவருடைய ஒரே மகன், சசிகுமார். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் கறிக்கடை வைத்திருக்கும் பாலா

கதாநாயகன்–கதாநாயகி: சசிகுமார்–தான்யா.

டைரக்ஷன்: பி.சோலை பிரகாஷ்.

கதையின் கரு: காதல் ஜோடிக்கு உதவும் வயதான தம்பதிகள்.

வயலூர் கிராமத்துக்கு தபால் அதிகாரியாக வருகிறார், ரோகிணி. இவருடைய ஒரே மகன், சசிகுமார். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் கறிக்கடை வைத்திருக்கும் பாலாசிங்கின் ஒரே மகள், தான்யா. இவர் தன்னை சசிகுமார் பின்தொடர்வதாக தப்பாக புரிந்து கொள்கிறார். இதுபற்றி அவர் பெற்றோர்களிடம் புகார் செய்ய பிரச்சினை ஆகிறது. இருவரும் நேருக்கு நேர் விசாரிக்கப்படுகிறார்கள்.

அப்போதுதான் தான்யாவை பார்க்கும் சசிகுமார், அவர் அழகில் மயங்கி, ‘‘நான்தான் பின்தொடர்ந்தேன்’’ என்று பொய் சொல்லி காதல் வளர்க்க முயற்சிக்கிறார். அவருடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார், பாலாசிங். காதலர்களுக்கு உதவ முன்வருகிறார்கள், வயதான தம்பதிகளான சங்கிலி முருகனும், கோவை சரளாவும்.

அதே கிராமத்தில், கேபிள் டி.வி. நடத்துபவர், வளவன். ஊர் முழுவதும் தனது கேபிள் டி.வி.தான் இருக்க வேண்டும். வேறு டி.வி. எதுவும் இருக்கக் கூடாது என்று வளவன் நினைக்கிறார். ஊருக்கு புதுசாக வந்திருக்கும் ரோகிணி–சசிகுமார் வீட்டில், டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்த்து, ஆத்திரப்படுகிறார். இது தொடர்பாக அவருக்கும், சசிகுமாருக்கும் மோதல் ஏற்படுகிறது. சசிகுமாரை வளவன் பழிவாங்க முயற்சிக்கிறார். அவருடைய சதித்திட்டங்கள் நிறைவேறியதா, சசிகுமார்–தான்யா காதல் என்ன ஆகிறது? என்ற கேள்விகளுக்கு, ‘கிளைமாக்ஸ்’சில் பதில் இருக்கிறது.

சசிகுமார், முதல் முறையாக நகைச்சுவை நாயகன் ஆகியிருக்கிறார். இவருக்கும், தான்யாவுக்குமான காதல் காட்சிகள், வசீகரிக்கின்றன. தன் மகளை பின்தொடர்ந்ததாக பாலாசிங் கூறிய புகாரை பொய்யாக்க ஆவேசத்துடன் செல்லும் சசிகுமார், அங்கு தான்யாவை பார்த்ததும் புகாரை மறந்து, ‘‘ஆமாம், நான்தான் பின்தொடர்ந்தேன்’’ என்று பல்டி அடிக்கிற காட்சியில் ஆரம்பித்து, சங்கிலி முருகன்–கோவை சரளா தம்பதிகளிடம் தன் காதலுக்கு உதவும்படி கேட்கிற காட்சிகள் வரை, சிரிப்பு மத்தாப்புகள்.

வில்லன் வளவனுடனான முட்டல்–மோதல் காட்சியில் பதற்றம் ஏற்படுவது, நிஜம். ‘‘அவனை அடிடா’’ என்று அம்மா ரோகிணி சொன்னதும், எதிரிகளை சசிகுமார் அடித்து துவம்சம் செய்கிற சண்டை காட்சியில், கைதட்ட தோன்றுகிறது.

தான்யா, அழகான இளம் கதாநாயகி. கீர்த்தி சுரேசுக்கு சரியான மாற்று. இவருடைய சிரிப்பும், நடிப்பும் ‘மார்க்’கை அள்ளுகின்றன.

‘செல்பி காத்தாயி’ கதாபாத்திரத்தில், கோவை சரளா வீடு கட்டி விளையாடி இருக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் கிச்சு கிச்சு மூட்டுகிற அவர், மலடி என்ற வார்த்தையை கேட்டதும் கதறி அழுது, உருகவும் வைக்கிறார். இவருடைய கணவராக சங்கிலி முருகன், தமாஷ் முருகன் ஆகியிருக்கிறார். பாசமும், கண்டிப்பும் கலந்த அம்மா வேடத்தில், ரோகிணி கச்சிதம்.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில், பசுமை போர்த்திய வயல்வெளிகளின் அழகு கண்களை குளிர வைக்கிறது. தர்புகா சிவா இசையில், பாடல்கள் சுமார். ஒரு அழகான கிராமத்து காதல் கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார், டைரக்டர் பி.சோலை பிரகாஷ். கிராமத்து காதலிலும், அது தொடர்பான காட்சிகளிலும் இருக்கும் ஈர்ப்பு நகைச்சுவை காட்சிகளிலும் இருந்திருந்தால், பலே சொல்ல வைத்திருப்பார், இந்த வெள்ளையத்தேவன்.

Next Story