போகன்


போகன்
x
தினத்தந்தி 4 Feb 2017 6:29 AM GMT (Updated: 4 Feb 2017 6:29 AM GMT)

அரவிந்தசாமி, ராஜவம்சத்தின் கடைசி வாரிசு. கூடு விட்டு கூடு பாயும் கலை தெரிந்தவர். அந்த கலையை பயன்படுத்தி ஒரு நகைக்கடையிலும், வங்கியிலும் கொள்ளையடிக்கிறார்.

கதையின் கரு: கூடு விட்டு கூடு பாயும் கலை தெரிந்த ஒருவனால் ஏற்படும் விபரீதங்கள்.

இந்த கொள்ளை வழக்குகளில் 2 அப்பாவிகள் குற்றவாளிகளாக சிக்குகிறார்கள். அவர்களில் உதவி போலீஸ் கமி‌ஷனர் ஜெயம் ரவியின் அப்பா நரேனும் ஒருவர்.

ஜெயம் ரவிக்கும், ஹன்சிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வங்கி கொள்ளை வழக்கில் நரேன் கைது செய்யப்பட்டதால், அந்த திருமணம் நின்று போகிறது. ஜெயம் ரவி மீது காதல்வசப்பட்ட ஹன்சிகா, பெற்றோர்களை விட்டு பிரிந்து ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இந்த நிலையில், நேர்மையான வங்கி அதிகாரியான தனது அப்பா எப்படி வங்கி கொள்ளையில் சிக்கினார்? என்று ஜெயம் ரவி துப்பறிகிறார். குற்றவாளி அரவிந்தசாமிதான் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்கிறார். அப்போது அரவிந்தசாமி தனது கூடு விட்டு கூடு பாயும் கலையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார். அவருடைய உடலுக்குள் ஜெயம் ரவியின் ஆன்மாவை புகுத்தி விடுகிறார்.

இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே ‘போகன்.’

உதவி போலீஸ் கமி‌ஷனர் வேடத்தில், ஜெயம் ரவி கச்சிதம். அவருடைய உயரமும், கம்பீரமான தோற்றமும், நடை–உடை–பாவனையும் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளன. ஹன்சிகாவுடன் காதல், வில்லன் அரவிந்தசாமியுடன் மோதல் என ஒரு அதிரடி கதாநாயகனுக்கு உரிய கடமைகளை நேர்த்தியாக செய்திருக்கிறார். அவருக்குள் அரவிந்தசாமியின் ஆன்மா புகுந்தபின், அரவிந்தசாமியைப் போலவே கையை சொடுக்கியபடி ஸ்டைலாக நடப்பதும், பேசுவதும், சூப்பர்.

தனக்கு பார்த்த மணப்பெண் ஹன்சிகா போதையில் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைவதும், போதைக்கான காரணத்தை புரிந்து கொண்டு ஹன்சிகாவுக்கு அவர் உதவுவதும், ரசனையான ஆரம்ப காட்சி. வங்கி கொள்ளையில் அப்பா எப்படி சிக்கினார்? என்பதை ஜெயம் ரவி துப்பறிந்து கண்டுபிடிக்கும் காட்சிகள், கைதட்ட வைக்கின்றன.

அரவிந்தசாமியை போலீஸ் காவலில் வைத்து ஜெயம் ரவி விசாரிப்பதும், அதைத்தொடர்ந்து நடைபெறும் அதிர்ச்சிகரமான திருப்பங்களும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஜெயம் ரவி உடலுக்குள் அரவிந்தசாமியும், அரவிந்தசாமியின் உடலுக்குள் ஜெயம் ரவியும் புகுந்தது போல் காட்டி, இடைவேளை விடுகிறார்கள்.

இடைவேளைக்குப்பின் ஜெயம் ரவியாக இருக்கும் அரவிந்தசாமியும், அரவிந்தசாமியாக இருக்கும் ஜெயம் ரவியும் ஒருவரையொருவர் மடக்க முயற்சிக்கும் காட்சிகள், விறுவிறுப்பின் உச்சம்.

அரவிந்தசாமி பாதி படம் வரை வில்லனாகவும், மீதி பாதியில் நல்லவராகவும் இரண்டு விதமான குணாதிசயங்களில் மிரட்டியிருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதாபாத்திரம். பாடல் காட்சிகளில், ஜெயம் ரவியுடன் நெருக்கம் காட்டி, ரசிகர்களை திருப்தி செய்கிறார். அவர் போதையில் ரகளை செய்வதும், மணமகனாக ஜெயம் ரவியை பார்த்து அதிர்வதும், ரகளையான காட்சிகள்.

நாசர், தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியராகவும், பொன்வண்ணன் போலீஸ் கமி‌ஷனராகவும், நாகேந்திர பிரசாத், வருண் ஆகிய இருவரும் சக போலீஸ் அதிகாரிகளாகவும் ஜீவனுள்ள கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

டி.இமான் இசையில் பாடல்கள் அத்தனையும் அமர்க்களம். பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம், அழகு. (ஒளிப்பதிவு: சவுந்தரராஜன்.) படத்தின் முதல் பாதியில் சுவாரஸ்யமாகவும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் லட்சுமன். கூடு விட்டு கூடு பாயும் கதையின் கருவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால், சூப்பர் மேன் ஆக பிரமிக்க வைப்பார், ‘போகன்.’


Next Story