மொட்ட சிவா கெட்ட சிவா


மொட்ட சிவா கெட்ட சிவா
x
தினத்தந்தி 11 March 2017 10:49 PM GMT (Updated: 11 March 2017 10:49 PM GMT)

கடமையே கண்ணாக இருக்கும் போலீஸ் அதிகாரி, சத்யராஜ். இவருடைய மனைவி, சுகன்யா. மகன், ராகவா லாரன்ஸ். பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றப் போய், மனைவி சுகன்யாவின் மரணத்துக்கு காரணமாகி விடுகிறார், சத்யராஜ்.

கதையின் கரு: போலீஸ் அதிகாரி–அரசியல்வாதி மோதல்.

 இதனால், அப்பா மீது மகன் ராகவா லாரன்சுக்கு வெறுப்பு. அப்பாவை விட்டு பிரிந்து போய் அனாதை இல்லத்தில் படித்து போலீஸ் அதிகாரியாகி, சென்னைக்கே வந்து நிற்கிறார்.

போலீஸ் கமி‌ஷனராக இருக்கும் அப்பா சத்யராஜுக்கு எதிராக உதவி கமி‌ஷனர் ராகவா லாரன்ஸ் செயல்படுகிறார். அதை, மோசமான அரசியல்வாதி அஸ்வத் தோஸ்ராணா பயன்படுத்திக் கொள்கிறார். அவருடைய தம்பி வம்சி கிருஷ்ணாவும், நண்பர்களும் சேர்ந்து வாய் பேச முடியாத ஒரு பெண்ணை கற்பழித்து கொன்று விடுகிறார்கள்.

இந்த சம்பவம் ராகவா லாரன்சின் மனதை மாற்ற–அரசியல்வாதிக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார். அவருக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் அபாயகரமான மோதல்களே திரைக்கதை.

காக்கி சட்டைகளில் கலக்கிய கதாநாயகர்கள் பட்டியலில் புதுசாக சேர்ந்திருக்கிறார், ராகவா லாரன்ஸ். ‘‘உன்னை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து கும்முவதற்கு என்றே ஒருவன் வருவான்’’ என்ற சத்யராஜின் வசன பின்னணியில் அட்டகாசமாக அறிமுகமாகிறார், ராகவா லாரன்ஸ். நடிப்பு, நடனம், சண்டை, ‘பஞ்ச்’ வசன உச்சரிப்பு எல்லாவற்றிலும் வேகம்...சூப்பர் வேகம்.

பழமொழிக்கு புதுமொழி சொல்லி, வில்லனின் ஒவ்வொரு சதித்திட்டங்களையும் முறியடிக்கும் ராகவா லாரன்சின் ஹீரோயிஸமும், நிக்கி கல்ராணியுடனான மோதலில் ஆரம்பிக்கும் காதலும் ரசிக்கும்படி இருக்கிறது.

டி.வி. நிருபராக நிக்கி கல்ராணி, படம் முழுக்க இடுப்பு தெரியும் உடைகளில் வருகிறார். கதாநாயகிக்கே உரிய காதல், டூயட் போன்ற வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். கமி‌ஷனர் வேடத்துக்கு கம்பீரம் சேர்க்கிறார், சத்யராஜ்.

அஸ்வத் தோஸ்ராணா, வம்சி கிருஷ்ணா இருவரும் வழக்கமான வில்லன்கள். சதீஷ், ஸ்ரீமன், தம்பிராமய்யா, மனோபாலா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், மதன்பாப், பாண்டு, மயில்சாமி, ‘மகாநதி’ சங்கர், ‘கும்கி’ அஸ்வின், சுகன்யா, தேவதர்சினி என படம் முழுக்க நட்சத்திர கூட்டம். ஒரே ஒரு பாடலுக்கு வந்தாலும், ராய் லட்சுமி கலக்கி விட்டு போகிறார்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள், ‘சூப்பர் ஹிட்.’ குறிப்பாக, ‘‘ஆடலுடன் பாடலை கேட்டு...’’ விருப்பங்களை அள்ளுகிறது. பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவு, பிரமிப்பு.

விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சாய்ரமணி. ‘‘ஐ ஹேட் போலீஸ்’’ என்று சொல்லும் அரசியல்வாதி வில்லனை ராகவா லாரன்ஸ் போலீஸ் நிலையத்துக்கு வரவழைப்பது; வாய் பேச முடியாத பெண் நித்யா தொடர்பான நெகிழ்ச்சியான காட்சிகள், பழமொழிக்கு புதுமொழி சொல்லும் புத்திசாலித்தனமான வசனங்கள் ஆகியவை படத்தின் சிறப்பு அம்சங்கள். மற்றதெல்லாம் பார்த்து பழகிப்போன காட்சிகள்.

Next Story