டோரா


டோரா
x
தினத்தந்தி 4 April 2017 10:52 PM GMT (Updated: 4 April 2017 10:52 PM GMT)

குலதெய்வத்தை கும்பிட அப்பா தம்பிராமய்யாவுடன் ஊருக்குப் போகிறார், நயன்தாரா.

நயன்தாரா நடித்த இன்னொரு திகில் படம்.

போன இடத்தில், “நாங்களும் டிராவல்ஸ் நடத்திக் காட்டுகிறோம்” என்று சொந்த அத்தையிடமே நயன்தாரா சவால் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னை திரும்பியதும் விட்ட சவாலை நிறைவேற்ற ஒரு பழைய கார் வாங்குகிறார். அந்த காருக்குள் ஒரு நாயின் ஆவி இருக்கிறது.

நாயின் ஆவி அந்த காருக்குள் வந்தது எப்படி? என்பது, ‘பிளாஷ்பேக்.’ ஒரு பாசமுள்ள தாத்தாவிடம் செல்லமாக வளரும் பேத்தி. தாத்தாவும், பேத்தியும் காரில் போகும்போது, வடநாட்டு கொள்ளையர்கள் மூன்று பேரிடம் சிக்குகிறார்கள். பணம்-நகைகளை பறித்துக் கொள்ளும் கொள்ளையர்கள், அந்த அப்பாவி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய சிறுமிக்கு மூளை சாவு ஏற்படுகிறது. அவளுடைய இதயம், நயன்தாராவுக்கு பொருத்தப்படுகிறது.
சிறுமி வளர்த்த டோரா என்ற நாய் அவள் சமாதிக்கு அருகிலேயே பட்டினி கிடந்து உயிரை விடுகிறது. நாயின் ஆவி, நயன்தாரா மூலம் கொள்ளையர்களை எப்படி பழிவாங்குகிறது? என்பது, ‘டோரா’வின் மீதி கதை.

திருமணம் செய்து கொண்டால், அப்பாவை கவனிக்க முடியாது என்பதற்காகவே பார்க்கிற மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக் கழிக்கிற பவளக்கொடியாக நயன்தாரா. கனவுக்கன்னி, கவர்ச்சி நாயகி ரசனைகளுக்கு ‘குட் பை’ சொல்லி விட்டு, முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார். அப்பாவை அதட்டி உருட்டும் மகளாக, காருக்குள் நிகழும் அமானுஷ்யங்களை பார்த்து மிரள்பவராக, தன்னை பிடிக்கவில்லை என்று சொன்ன மாப்பிள்ளை ஹரீஷ் உத்தமனை திட்டி அனுப்பும் வாயாடி பெண்ணாக-நயன்தாரா பல்வேறு முகம் காட்டியிருக்கிறார்.

போலீஸ் நிலையத்தில் உயர் அதிகாரியிடம் உருக்கமாகவும், ஹரீஷ் உத்தமனிடம் சவாலாகவும் நயன்தாரா இரண்டு விதமாக பேசி நடிக்கும் இடம், மிரட்டல். அவர் சொந்த குரலில் பேசியிருப்பது, படத்தின் இன்னொரு அம்சம்.
நயன்தாராவின் தந்தையாக தம்பி ராமய்யா. ‘காமெடி’ அப்பா. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஹரீஷ் உத்தமனுக்கு அதிக வேலையில்லை. வடநாட்டு கொள்ளை கும்பல் தலைவனாக சுலில் குமார், பயமுறுத்துகிறார். “எங்களை விட்டுருங்க அண்ணா” என்று கெஞ்சுகிற இடத்தில், பேபி யுக்தா நெகிழ வைக்கிறார்.

இரவு நேர காட்சிகளை திகிலாக படம் பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். விவேக்-மெர்வின் பின்னணி இசை, கூடுதல் பலம். கலகலப்பாக ஆரம்பித்து, படிப்படியாக திகிலூட்டி, எதிர்பார்ப்புடன் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் தாஸ் ராமசாமி. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம்.


Next Story