விமர்சனம்
சிவலிங்கா

சிவலிங்கா
ராகவா லாரன்ஸ், வடிவேல், சக்திவாசு,ராதாரவி, வி.டி.வி.கணேஷ், ரித்திகாசிங், ஊர்வசி, பானுப்ரியா, மதுமிதா பி.வாசு எஸ்.எஸ்.தமன் பி.கே.எச்.தாஸ்
சீறிப்பாய்ந்து ஓடுகிறது, ஒரு ரெயில். அந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் சக்திவேல் வாசு படுத்தபடி பயணம் செய்கிறார்.
Chennai
கதையின் கரு: ஒரு கொலையும், அதைப்பார்த்த புறாவும்...

 அவர் தோள் மீது வளர்ப்பு புறா அமர்ந்து இருக்கிறது. வேறு பயணிகளே இல்லாத அந்த ரெயில் பெட்டியில், கண் பார்வையற்ற ஒருவர் கழிவறையை தேடிப்போவதற்கு பதில் கதவை நோக்கி போகிறார். புறா சிறகடித்து சக்திவேல் வாசுவை எழுப்புகிறது. அவர் பாய்ந்து சென்று பார்வையற்றவரை காப்பாற்றுகிறார். அடுத்த நிமிடம் சக்திவேல் வாசுவை பார்வையற்றவர் போல் வந்த ஆசாமி எட்டி உதைத்து வெளியே தள்ளுகிறான். மின்சார கம்பத்தில் மோதி சக்திவேல் வாசு பலியாகிறார்.

இப்படி, பரபரப்பாக ஆரம்பிக்கிறது படம். சக்திவேல் வாசு, ஒரு சமையல் கலைஞர். பிரியாணி சமைப்பதில் பிரபலமானவர். அவருடைய ஆவி, கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ராகவா லாரன்சின் மனைவி ரித்திகாசிங் உடம்புக்குள் புகுந்து கொள்கிறது. “என்னை கொலை செய்தவனை கண்டுபிடி...” என்று ராகவா லாரன்சை மிரட்டுகிறது. சக்திவேல் வாசு ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்த மர்மத்தை ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா? என்பது மீதி கதை.

சி.பி.சி.ஐ.டி.யாக இருந்தாலும் பேய்க்கு பயப்படுகிற கதாபாத்திரம், ராகவா லாரன்சுக்கு. அவர் தனது புது மனைவியுடன் சுடுகாடு பக்கமுள்ள தனிமை பங்களாவில் தங்குவது போல் கதை நகர்கிறது. ராகவா லாரன்சுக்கு பொருத்தமான கதாபாத்திரம். காமெடி நாயகனாகவும், அதிரடி நாயகனாகவும் மனதை ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில், புயல் வேகத்தில் நடனம் ஆடுகிறார். ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார். பேய் பிடித்த மனைவியை பார்த்து பயத்தில் மிரள்கிறார். நடை, உடை, உடல்மொழிகளில் ரஜினிகாந்தை நகல் எடுத்த மாதிரி தெரிகிறார்.

டூயட் பாடும்போது அழகாக வரும் ரித்திகாசிங், பேயாக மாறும்போது மிரட்டியிருக்கிறார். சக்திவேல் வாசுவுக்கு அநியாயமாக கொலை செய்யப்படும் அனுதாபகரமான கதாபாத்திரம். நேர்மையான ஒரு இஸ்லாமிய இளைஞராக மனதில் பதிகிறார்.

ராகவா லாரன்ஸ்-ரித்திகாசிங் வீட்டுக்குள் புகுந்த திருடராக வடிவேல். இவர், எப்படி கொள்ளையடித்தார்? என்று ஊர்வசியின் கழுத்தில் கத்தியை வைத்து நடித்துக் காட்டுகிற இடத்தில், தியேட்டர் அதிர்கிறது. கைப்புள்ள, ஸ்னேக் பாபு, வண்டு முருகன் வரிசையில், இனி பட்டுகுஞ்சமும் பேசப்படுவார். ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா, பிரதீப் ராவத் ஆகியோருடன் சாரா என்ற புறாவும் நடித்து இருக்கிறது. அதன் சாகசங்கள், ஆச்சரியப்படுத்துகின்றன.

எஸ்.எஸ்.தமன் இசையில், பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பேய் வரும் காட்சிகளில், பின்னணி இசை பயமுறுத்துகிறது. நகைச்சுவை-திகில் கலந்து விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பி.வாசு. ‘டைட்டில்’ காட்சியிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். படத்தின் நீளம் அதிகம். பாடல் காட்சிகளை குறைத்து இருக்கலாம். பேய், ராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்பதெல்லாம், ரொம்ப ஓவர். ‘கிளைமாக்ஸ்’சில் வரும் யூகிக்க முடியாத திருப்பங்கள், இருக்கை நுனியில் அமர வைக்கின்றன.

முன்னோட்டம்

துப்பாக்கி முனை

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.

ஜானி

வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம்.

அடங்க மறு

ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

மேலும் முன்னோட்டம்