மெர்லின்


மெர்லின்
x
தினத்தந்தி 24 Feb 2018 9:46 PM GMT (Updated: 24 Feb 2018 9:46 PM GMT)

நட்பு, காதல், திகில் கலவையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கீரா. அஸ்வினி காதலியாகவும், பேயாகவும் வருகிறார், சினிமா விமர்சனம்.

சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் விஷ்ணுப்பிரியனுக்கு டைரக்டராக வேண்டும் என்பது லட்சியம். பவர் ஸ்டார் சீனிவாசன் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தினேசுக்கு விஷ்ணுப்பிரியன் சொன்ன கதை சுருக்கம் பிடிக்கிறது. ஒரு வாரத்துக்குள் முழு கதையையும் தயார் செய்து வரும்படி சொல்கிறார்.

இரவு பகலாக கதை எழுத தொடங்குகிறார். ஆனால் அறையில் இருக்கும் நண்பர்கள் ரகளையால் தடை ஏற்படுகிறது. அவர்களை பயமுறுத்த பல வருடங்களுக்கு முன்பு அந்த அறையில் ஒரு இளம்பெண் வசித்ததாகவும், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் சிலர் கற்பழித்து கொன்றுவிட்டதாகவும், அந்த பெண் ஆவியாக வீட்டை சுற்றி நடமாடுவதாகவும் கற்பனையாக கதை சொல்கிறார்.

நண்பர்கள் அதை உண்மை என்று நம்பி பயந்து அமைதியாகிறார்கள். அதன் பிறகு தொந்தரவு இல்லாமல் கதை எழுத தொடங்குகிறார். அப்போது விஷ்ணுப்பிரியன் பொய்யாக சொன்ன பேய் உண்மையாகவே வந்து அவரது உடலுக்குள் புகுந்து விடுகிறது. இறந்துபோன பெண் யார்? விஷ்ணுப்பிரியனை விட்டு ஆவி விலகியதா? அவர் டைரக்டர் ஆனாரா? என்பது மீதி கதை.

மோகினி பிசாசு, அதன் நீளமான தலைமுடியை பிடித்தவனின் வாழ்வா சாவா போராட்டம் என்று ஆரம்ப காட்சிகளே பீதியோடு தொடங்குகிறது. விஷ்ணுப்பிரியன் டைரக்டராக துடிக்கும் லட்சிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். நள்ளிரவில் மரத்தில் பேயை பார்த்து அலறும் காட்சியில் படம் பார்ப்பவர்களுக்கும் நடுக்கம் வருகிறது. காதலித்த பெண் அழகில்லை என்று உதறும்போதும் பிறகு மனம் மாறி அவரை தேடி செல்வதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அஸ்வினி காதலியாகவும், பேயாகவும் வருகிறார். பேய் நடிப்பில் பயமுறுத்துகிறார். ஆடுகளம் முருகதாஸ், ஜீவா சிரிக்க வைக்கின்றனர். சாமியாராக வருகிறார் தேவராஜ். பேயை வைத்து இன்னும் பயமுறுத்தி இருக்கலாம். நட்பு, காதல், திகில் கலவையில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கீரா. கணேஷ் ராகவேந்திரா இசையும், முத்துக்குமரன் ஒளிப்பதிவும் திகில் கதைக்கு உதவி இருக்கின்றன.

Next Story