செக்கச் சிவந்த வானம்


செக்கச் சிவந்த வானம்
x
தினத்தந்தி 28 Sep 2018 4:38 PM GMT (Updated: 28 Sep 2018 4:38 PM GMT)

பெரிய பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக் கொண்டு மணிரத்னம் சொன்ன தாதாக்கள் மற்றும் அடியாட்களின் கதை.

பிரகாஷ்ராஜ், ஒரு மிகப்பெரிய தாதா. இவருடைய மனைவி, ஜெயசுதா. இவர்களுக்கு அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய் ஆகிய மூன்று பேரும் மகன்கள். மூத்த மகன் அரவிந்தசாமியின் மனைவி, ஜோதிகா. காதலி, அதிதி ராவ். பிரகாஷ்ராஜின் எதிரி, இன்னொரு தாதாவான தியாகராஜன். மூத்த மகன் அரவிந்தசாமி, அப்பாவுடன் சென்னையில் வசிக்கிறார். சிம்பு செர்பியாவிலும், அருண் விஜய் துபாயிலும் வசிக்கிறார்கள். அரவிந்தசாமியின் நெருக்கமான போலீஸ் நண்பர், விஜய் சேதுபதி.

அப்பாவுக்கு பின்னால் அவருடைய இடம் யாருக்கு? என்று மூன்று மகன்களும் மோதிக்கொள்வது, கதை.

வண்ணமயமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரவு நேர சென்னையை ‘டாப் ஆங்கிள்’ளில் காட்டி, “ஒவ்வொரு நகரின் முகமும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்...” என்று விஜய் சேதுபதியை பின்னணி பேச வைத்து, எதிர்பார்ப்புடன் படத்தை தொடங்குகிறார், டைரக்டர் மணிரத்னம்.

படகு காரில் மனைவி ஜெயசுதாவுடன் கோவிலுக்கு போகும் பிரகாஷ்ராஜ், தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது, இருவரையும் கொலை செய்ய முயற்சி நடப்பது போல் திடுக் சம்பவத்துடன் கதை ஆரம்பிக்கிறது. மூன்று மகன்களும் அடுத்தடுத்து பறந்து வந்து அப்பாவை பார்க்கிறார்கள். பழிக்குப்பழியாக தியாகராஜனின் மருமகனை கொல்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இடைவேளை வரை விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மணிரத்னம்.

கதாநாயகன்-கதாநாயகி என்று யாரையும் பதிவு செய்யாமல், அத்தனை பெரிய நட்சத்திரங்களையும் கதாபாத்திரங்களாக பதிவு செய்திருப்பது, ‘மணிரத்ன’ துணிச்சல். அழகான கதாநாயகன் மற்றும் வில்லனாக வந்த அரவிந்தசாமி, ஒரு குட்டி தாதாவாக பயமுறுத்தியிருக்கிறார். அவருடைய பதவி ஆசையை இன்னும் கொஞ்சம் மிரட்டலாக காட்டியிருக்கலாம்.

எஸ்.டி.ஆர். (சிம்பு), “நான் யாரிடமும் பிரியமாக இருக்க மாட்டேன். அப்படியிருந்தால், என்னை விட்டு அவங்க ஓடிருவாங்க” என்று சொல்லும்போதும், “நான் உன் அண்ணன் ஆள். இப்ப என்னை எடு பார்க்கலாம்” என்று அதிதி ராவ் சொல்ல- “எனக்கு தேவைப்பட்டால், யாராக இருந்தாலும் எடுத்துக் கொள்வேன்” என்று அதிதி ராவை இறுக்கி அணைக்கும்போதும்- தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

பிரகாஷ்ராஜின் மறைவுக்குப்பின், அருண் விஜய் இன்னொரு முகம் காட்டுவது, எதிர்பாராத திருப்பம். படம் முழுக்க அவருடைய உடல் மொழியையும், வசன உச்சரிப்பையும் மாற்றியிருப்பதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. படத்தில் நகைச்சுவை நாயகர்கள் இல்லாத குறையை போக்கியிருப்பவர், விஜய் சேதுபதிதான். “நான் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி” என்று அவர் கூறும்போதும், “எனக்கு தாதாக்களையும், ரவுடிகளையும் பிடிக்காது” என்று சிம்புவின் கதையை முடித்து வைக்கும்போதும்-தியேட்டரில் ஆரவாரம்.

அரவிந்தசாமியின் மனைவியாக ஜோதிகா. இத்தனை சின்ன கதாபாத்திரத்துக்கு ஜோதிகா எதற்கு? யானைப்பசிக்கு சோளப்பொறி. ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எர்ரப்பா ஆகிய மூன்று பேரும் ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தியாகராஜனை வேறொரு பரிமாணத்தில் காட்டி, ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், டைரக்டர் மணிரத்னம். மன்சூர் அலிகான் அடியாளாக வந்து போகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, படத்தின் இன்னொரு கதாநாயகன். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள், கவனம் ஈர்க்கின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, பல காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம், வசனம். சின்ன சின்ன வரிகள் கூட, கரகோஷம் பெறுகின்றன. இடைவேளை வரை படுவேகமாக பறந்த திரைக்கதை, இடைவேளைக்குப்பின் வேகம் குறைந்து, ‘கிளைமாக்ஸ்’சில் மறுபடியும் சூப்பர் வேகம் பிடிக்கிறது.

Next Story