ராட்சசன்


ராட்சசன்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:16 PM GMT (Updated: 13 Oct 2018 11:16 PM GMT)

விஷ்ணு விஷால் நிஜத்தில் நடந்த சைக்கோ கொலை சம்பவங்களை சேகரித்து அதை மையமாக வைத்து திரில்லர் திரைக்கதையை உருவாக்குகிறார். ராட்சசன்

சினிமாவில் டைரக்டராக விரும்பும் விஷ்ணு விஷால் நிஜத்தில் நடந்த சைக்கோ கொலை சம்பவங்களை சேகரித்து அதை மையமாக வைத்து திரில்லர் திரைக்கதையை உருவாக்குகிறார். ஆனால் அதை படமாக எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். இதனால் பிடிக்காத போலீஸ் வேலையில் சேர்கிறார்.

அப்போது ஒரு பள்ளி மாணவி கொல்லப்படும் சம்பவம் நடக்கிறது. அந்த கொலை தடயங்களை ஆராயும் விஷ்ணு விஷால் கொலைகாரன் சைக்கோ என்று கண்டுபிடிக்கிறார். மேலும் பல கொலைகளை அவன் செய்வான் என்றும் எச்சரிக்கிறார். அதன்படியே சிறுமிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள்.

கொலைகாரனை அவர் நெருங்கும்போது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சைக்கோ கொலையாளி யார்? எதற்காக அவன் கொலைகள் செய்கிறான். அவனை விஷ்ணு விஷால் அழித்தாரா? என்பது மீதி கதை.

விஷ்ணு விஷாலுக்கு இது முக்கிய படம். கதையை உள்வாங்கி கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். இயக்குனராகும் லட்சியத்தையும், அது தோல்வியாகும் விரக்தியையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தொடர் கொலைகளையும் கொலையாளியின் குரூர மன நிலையையும் கண்டு அதிர்வதிலும், துப்பு துலக்குவதிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சொந்த குடும்பத்தில் நடக்கும் துயரத்தால் அழுது புலம்புவது உருக்கம்.

கொலையாளியை சிக்க வைக்க அவர் அமைக்கும் வியூகங்கள் விறுவிறுப்பூட்டுகின்றன. பள்ளி ஆசிரியையாக வரும் அமலாபால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சைக்கோ கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடும் காட்சிகள் நடுங்க வைக்கின்றன. முனிஸ்காந்த் சிறந்த குணசித்திர நடிகராக தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். ராதாரவி, காளிவெங்கட், நிழல்கள் ரவி, சூசன் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

சைக்கோ கொலையை மையமாக வைத்து அடுத்து என்ன ஆகுமோ? என்ற பயமும் பதற்றமும் ஏற்படுத்தி காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைத்து இருப்பதில் இயக்குனர் ராம்குமார் திறமை பளிச்சிடுகிறது. குரூர கொலைகள் ஹாலிவுட் படம்பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. பிற்பகுதியில் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். ஜிப்ரான் பின்னணி இசை திகிலூட்டுகிறது. பி.வி. சங்கர் ஒளிப்பதிவில் உழைப்பு தெரிகிறது.

Next Story