சண்டக்கோழி2


சண்டக்கோழி2
x
தினத்தந்தி 22 Oct 2018 5:22 PM GMT (Updated: 22 Oct 2018 5:22 PM GMT)

வருடக்கணக்கில் நின்று போன கோவில் திருவிழாவை மறுபடியும் நடத்த முயற்சிக்கும் கதாநாயகன். கதாநாயகன் விஷால், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் லிங்குசாமி, இயக்கியுள்ள சண்டக்கோழி-2 படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  வெற்றிகரமாக ஓடிய ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தின் கதாநாயகி மீராஜாஸ்மினுக்கு பதில் கீர்த்தி சுரேஷ். அந்த கிராமத்தில், சில கசப்பான சம்பவங்களால் 7 வருடங்களாக நின்று போன கோவில் திருவிழாவை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார்கள். ஊர் தலைவர் ராஜ்கிரண் தலைமையில் நடைபெற்ற பஞ்சாயத்தில், இது முடிவாகிறது. வெளிநாட்டுக்குப்போன ராஜ்கிரணின் மகன் விஷால், கோவில் திருவிழாவுக்காக ஊர் திரும்புகிறார். அவருக்கும், ஆசிரியர் ஞானசம்பந்தனின் மகள் கீர்த்தி சுரேசுக்கும் காதல் வருகிறது. 7 வருடங்களுக்கு முன்பு ஊர் திருவிழாவில், வரலட்சுமியின் கணவர் கொலை செய்யப்படுகிறார். கணவரை கொன்ற குடும்பத்தை சேர்ந்த 6 பேர்களை வரலட்சுமியின் உத்தரவின் பேரில், அடியாட்கள் வெட்டி சாய்க்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அவரையும் நடைபெற இருக்கும் கோவில் திருவிழாவில் காவு வாங்க திட்டம் தீட்டுகிறார்கள். வரலட்சுமியால் ‘ஸ்கெட்ச்’ போடப்பட்ட அந்த நபரை தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார், ராஜ்கிரண். அதனால் அவரை வெட்டி சாய்க்கிறார்கள்.

“கோவில் திருவிழா நின்று விடக்கூடாது. அது அமைதியாக நடைபெற வேண்டும்” என்று மகன் விஷாலுக்கு உத்தரவிடுகிறார், ராஜ்கிரண். அப்பாவையும், அவருடைய உத்தரவையும், வரலட்சுமியினால் குறிவைக்கப்பட்டவரையும் விஷால் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது மீதி கதை.

காதல், மோதல் ஆகியவற்றுடன் அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்ற போராடும் மகனாக விஷால். அவருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் அமைந்து இருக்கிறது. கீர்த்தி சுரேசிடம் டிரைவராக அறிமுகமாகி, அவர் மீது காதல் வளர்க்கும் காட்சிகளில், விஷால் சுவாரஸ்யம் கூட்டுகிறார். சண்டை காட்சிகளில் அவருடைய வேகமும், விவேகமும் வியக்க வைக்கிறது. படம் முழுக்க அவர் ‘பஞ்ச்’ வசனம் பேசி, ரசிகர்களை திருப்தி செய்கிறார்.

கீர்த்தி சுரேசுக்கு இதுவரை கிடைக்காத மாறுபட்ட கதாபாத்திரம். படத்தின் முதல் பாதி வரை குறும்புக்கார கிராமத்து பெண்ணாக வரும் அவர், இரண்டாம் பாதியில், காதலில் தோல்வி அடைந்தவராக சோக முகம் காட்டுகிறார். விஷால் வீட்டுக்குள் புகுந்து நியாயம் கேட்க வந்தவர், ராஜ்கிரணை அந்த நிலையில் பார்த்து கண்கலங்கும் இடத்தில், கலங்கவும் வைக்கிறார்.

வரலட்சுமிக்கு வில்லி வேடம். அவருடைய கொலை வெறியும், அது தோற்றுப் போகும்போதெல்லாம் காட்டும் ஆக்ரோஷமும் தியேட்டரை அதிர வைக்கின்றன.

ஒரு கதாநாயகனுக்கு உரிய கம்பீரத்துடன் ராஜ்கிரண். சண்டை காட்சிகளில் அவர் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம், நிமிர்ந்து உட்கார வைக்கிறார். கஞ்சா கருப்புவும், முனீஸ்காந்தும் கலகலப்பூட்டுகிறார்கள். சண்முகராஜன், தென்னவன், ‘கயல்’ தேவராஜ் ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு பிரமிப்பூட்டுகின்றன. குறிப்பாக திருவிழா காட்சிகள், கதையுடன் ஒன்ற வைக்கின்றன.

படத்தின் நீளம் அதிகம். முடிவு, 2 கிளைமாக்ஸ் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கிராமத்து காதல், மோதல், நின்று போன திருவிழா, பழிக்குப்பழி வாங்க முயற்சிக்கும் வில்லி, அவருடைய கொலை வெறியை துணிச்சலுடன் சந்திக்கும் கதாநாயகன் என ஆர்வத்தை தூண்டுகிற ஜனரஞ்சகமான கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் லிங்குசாமி. முதல் பாகத்தில் மிரட்டிய வில்லன் லாலை கடைசி காட்சியில் ஆஜர்படுத்தியிருப்பது, சிறப்பு.

Next Story