எந்திரன் - 2


எந்திரன் - 2
x
தினத்தந்தி 30 Nov 2018 5:25 PM GMT (Updated: 30 Nov 2018 5:25 PM GMT)

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள்.

இதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம்? என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார். விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) வரவழைக்கப்படுகிறார். ‘செல்போன்’களால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணமாக இருப்பார் என்று வசீகரன் யூகிக்கிறார். அவருடைய யூகம் சரியாக இருக்கிறது.

“செல்போன் கோபுரங்களால் பறவைகள், குறிப்பாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகளை காப்பாற்ற வேண்டும் என்றால் செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்” என்று பறவைகள் மீது அக்கறை கொண்ட பட்சிராஜன் (அக்‌ஷய்குமார்) அரசாங்கத்திடம் மனு கொடுக்கிறார். அவர் அலட்சியப்படுத்தப்படுகிறார். அவருடைய மனு குப்பைக்கு போகிறது. அக்‌ஷய்குமார் ‘செல்போன்’ டவரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

அவருடைய ஆத்மாவுடன் பறவைகளின் ஆத்மாக்கள் சேர்ந்து, அக்‌ஷய்குமாருக்கு ராட்சச பறவையின் தோற்றத்தை கொடுக்கின்றன. அந்த ராட்சச பறவை பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. வாகனங்களை அடித்து நொறுக்குகிறது. ஊரையே காலி செய்வது போல் மிரட்டுகிறது. ராட்சச பறவையை அழிப்பதற்கு அதை விட ‘பவர்புல்’லான ஒருவரை உருவாக்க வேண்டும். (எந்திரனில் கலக்கிய) ‘சிட்டி’யை மீண்டும் உருவாக்க அனுமதி வேண்டும் என்று வசீகரன் கேட்கிறார்.

‘சிட்டி’யை மீண்டும் உருவாக்க அனுமதி கிடைக்கிறது. அவருக்கும், பட்சிராஜாவுக்கும் நடக்கும் அபாயகரமான யுத்தம், மீதி படம்.

வசீகரன், சிட்டி என ரஜினிகாந்துக்கு 2 வேடங்கள். ஒருவர் விஞ்ஞானி. மற்றொருவர், எந்திர மனிதர். வசீகரன், பெயருக்கு தகுந்தாற்போல் அழகான விஞ்ஞானி. சிட்டி, துணிச்சல் மிகுந்த அபூர்வ எந்திரன். இரண்டு வேடங்களில், அறிமுக காட்சியில் இருந்து ‘கிளைமாக்ஸ்’ வரை அமர்க்களம் செய்பவர், சிட்டிதான். அவர், அக்‌ஷய்குமாருடன் மோதுகிற காட்சிகள், படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. சிட்டி, பஞ்ச் வசனமும் பேசுகிறார்.

“வசீகரன் கண்டுபிடிப்பில் உருப்படியான ரெண்டு விஷயம்...ஒண்ணு நான். இன்னொன்ணு நீ...இங்கே நம்பர்-1, நம்பர்-2 என்பதெல்லாம் இல்லை. எப்பவுமே சூப்பர்தான்” என்று எமிஜாக்சனிடம், சிட்டி சொல்கிற காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. ‘சிட்டி’யின் ஸ்டைல், ‘பாட்ஷா’வையும் தாண்டி ரசிக்கப்படுகிறது.

எமிஜாக்சன், ஹாலிவுட் நாயகிகளுக்கு சரியான சவால். அவருடைய சண்டைகளும், சாகசங்களும் வியக்க வைக்கின்றன. அக்‌ஷய்குமார், பொருத்தமான தேர்வு. பறவைகளின் வயதான ரட்சகர், பறவை உருவம் கொண்ட ராட்சசன் ஆகிய இரண்டு தோற்றங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். பறவைகளுக்காக அவர் உருகும் இடத்திலும், “பறவைகள் இருந்தால்தான் மனிதன் வாழ முடியும்” என்பதற்கு விளக்கம் சொல்லும் காட்சியிலும், நெகிழவைத்து விடுகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு இரண்டும் சேர்ந்த 3டி தொழில்நுட்பம், மிரட்டல். சம்பவங்கள் அனைத்தும் கண் முன்பு நடக்கிற உணர்வை நிகழ்த்தியுள்ளன. அறிவியல் சார்ந்த கதையை கம்ப்யூட்டர் யுகத்துக்கு பொருந்துகிற மாதிரி புத்திசாலித்தனமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஷங்கர். புரியாத வசனத்துடன் வரும் ஒரு சில காட்சிகள் திருஷ்டி பரிகாரம்.

இந்திய சினிமாவில் இப்படியொரு பிரமாண்டமா என்றும், இவ்வளவு அறிவுப்பூர்வமான டைரக்டரா? என்றும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது, ‘2.0.’

Next Story