துப்பாக்கி முனை


துப்பாக்கி முனை
x
தினத்தந்தி 14 Dec 2018 3:43 PM GMT (Updated: 14 Dec 2018 3:43 PM GMT)

ஒரு கற்பழிப்பு குற்றமும், என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியும். படம் "துப்பாக்கி முனை" கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ஹன்சிகா, டைரக்‌ஷன் தினேஷ் செல்வராஜ் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  விக்ரம் பிரபு, என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி. அவர் கடற்கரையில் நின்று கொண்டு தனது கதையை சொல்வது போல் படம் தொடங்குகிறது. அவர் ‘என்கவுண்ட்டரில்’ குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது, தாயாருக்கு பிடிக்கவில்லை. மகன், பல கொலைகளை செய்வதாக நினைக்கிறார். இதற்காகவே மகனை விட்டு பிரிந்து தனிமையில் வசிக்கிறார்.

இந்த நிலையில், ஏழை சவர தொழிலாளி எம்.எஸ்.பாஸ்கரின் ஒரே மகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில், கற்பழித்து கொலை செய்யப்படுகிறாள். குற்றவாளிகளில் ஒருவன், செல்வாக்கு மிகுந்த பிரமுகர் வேலராமமூர்த்தியின் மகன். மற்ற மூன்று பேரும் அவனுடைய நண்பர்கள். உண்மையான குற்றவாளிகளான அந்த நான்கு பேரையும் வேலராமமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி காப்பாற்ற முயற்சிக்கிறார்.

வடநாட்டை சேர்ந்த ஒரு ஏழை இளைஞர் மீது கற்பழிப்பு-கொலை குற்றத்தை சுமத்தி, அவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள முயற்சி நடக்கிறது. சவர தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கர், விக்ரம் பிரபுவை சந்தித்து தனது மகள் அமைச்சரின் மகனால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவரத்தை சொல்கிறார். உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவி வடநாட்டு இளைஞர் பலிகடா ஆக்கப்படுவதை கண்ணீர் மல்க எடுத்து கூறுகிறார்.

வடநாட்டு இளைஞரை என்கவுண்ட்டரில் கொல்வதற்கு விக்ரம் பிரபு கூட்டி செல்கிறார். அவர், அந்த இளைஞரை என்கவுண்ட்டரில் சுட்டுத்தள்ளினாரா, உண்மையான குற்றவாளிகள் என்ன ஆகிறார்கள்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

‘என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு. அவருடைய தோற்றமும், கனத்த குரலும் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகின்றன. அந்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை விக்ரம் பிரபு உள்வாங்கி நடித்து இருக்கிறார். ஹன்சிகா மீது மென்மையான காதல், அம்மாவிடம் பாசம், அந்த அம்மாவின் பிரிவினால் ஏற்படும் உருக்கம் ஆகிய உணர்வுகளை விக்ரம் பிரபு மிக சரியாக வெளிப்படுத்துகிறார்.

அவருடைய காதலியாக ஹன்சிகா. அவர் ஒரு சில காட்சிகளே வந்து போனாலும், படம் முழுக்க இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

ஏழை சவர தொழிலாளி கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், எம்.எஸ்.பாஸ்கர். மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை இவர் விக்ரம் பிரபுவிடம் சொல்கிற காட்சியில், உருக்கி விடுகிறார். ‘கிளைமாக்ஸ்’சில் இவர் அமைச்சரின் வீட்டுக்குள் புகுந்து குற்றவாளிகளை தண்டிக்கும் காட்சியில், ஆக்ரோஷத்தின் உச்சம். அந்த காட்சியில் அவர் பேசுகிற வசன வரிகளுக்கு கைதட்ட தோன்றுகிறது.

அடர்ந்த காடுகள், மணல் மேடுகள், கடற்கரை என இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் ராசாமதி படம் பிடித்த விதம், அழகு. இசையமைப்பாளர்கள் முத்து கணேஷ், பின்னணி இசை மூலம் படம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்குப்பின் கதை வேகம் பிடிக்கிறது. உச்சகட்ட காட்சி, சரியான முடிவு.

Next Story