கனா


கனா
x
தினத்தந்தி 23 Dec 2018 4:27 PM GMT (Updated: 23 Dec 2018 4:27 PM GMT)

கிரிக்கெட் வீராங்கனையாகி உலக போட்டியில் ஜெயித்து தந்தையை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். படம் "கனா" கதாநாயகன் சத்யராஜ்,தர்ஷன் , கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்‌ஷன் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.

கிராமத்தில் விவசாயம் செய்யும் சத்யராஜுக்கு கிரிக்கெட்டில் வெறி. தந்தை சாவுக்கே கலங்காதவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா தோற்றதும் கண்ணீர் வடிக்கிறார். அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேசையும் கிரிக்கெட் ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. கிரிக்கெட் வீராங்கனையாகி உலக போட்டியில் ஜெயித்து தந்தையை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார்.

பள்ளிக்கு செல்லும்போது ஆண்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். பெண்ணுக்கு எதற்கு கிரிக்கெட் என்று தாய் எதிர்க்கிறார். சத்யராஜோ மகள் ஆர்வத்தை ஊக்குவிக்கிறார். உள்ளூர் விளையாட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் திறமையை பார்த்து வியக்கின்றனர். படிப்படியாக முன்னேறி உலக போட்டி அணியில் பங்குபெற பயிற்சி எடுக்கிறார்.

அங்கு அவரை ஓரம் கட்ட சதிகள் நடக்கின்றன. இன்னொரு புறம் மழைபொய்த்து வறட்சியால் கடனாளியாகி சத்யராஜ் நிலைகுலைகிறார். வங்கியும் ஜப்தியில் இறங்குகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் லட்சியம் நிறைவேறியதா? வறுமையில் இருந்து சத்யராஜ் மீண்டாரா? என்பது கிளைமாக்ஸ்.

சத்யராஜ் விவசாயியாகவும், பாசமான தந்தையாகவும் வாழ்ந்து இருக்கிறார். வறட்சியால் தற்கொலை உணர்வுக்கு தள்ளப்படும் விரக்தியிலும் வங்கி அதிகாரி அவமானப்படுத்தும் வலிகளை சுமக்கும்போதும் வீடு ஜப்தியாகி தெருவில் நிற்பதை மறைத்து மகளிடம் போனில் சகஜமாக பேசும்போதும் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்.

வியர்வை சிந்த பயிற்சிகள், ஆவேச பந்து வீச்சு, கிரிக்கெட் மட்டையால் விளாசல் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜ கிரிக்கெட் வீராங்கனையாகவே கண்ணுக்குள் நிற்கிறார். சாதிக்க துடிக்கும் உணர்வுகளையும், சுற்றி நடக்கும் தடைகளால் ஏற்படும் வலிகளையும் அபாரமாக முகத்தில் கடத்துகிறார்.

விளையாட்டை சீரியஸாக எடுத்துக்கொள்ளும் இந்தியா விவசாயத்தை விளையாட்டாக கூட எடுத்துக்க மாட்டேங்குது என்று கிளைமாக்சில் வசனம் பேசி சமூக அவலத்தை விளாசுகிறார். கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் சிறிது நேரம் வந்தாலும் கம்பீரம். ‘ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது. ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்’ என்ற பஞ்ச் வசனத்தில் கைதட்டல் பெறுகிறார்.

சத்யராஜ் மனைவியாக வரும் ரமா, நண்பராக வரும் இளவரசு, போலீஸ் அதிகாரியாக வரும் முனிஸ்காந்த் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே மாறி உள்ளனர். தர்ஷன், பாக்யராஜ், சவரிமுத்து ஆகியோர் கலகலப்பூட்டுகிறார்கள்.

விவசாயத்தையும், விளையாட்டையும் இணைத்து தரமான படம் தந்துள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். டெல்டா விவசாயிகளின் அவல நிலையையும், விளையாட்டில் சாதிக்க துடிக்கும் ஏழை பெண்களை விரட்டும் சவால்களையும் அற்புதமாக காட்சிப்படுத்தி திறமையான இயக்குனராக அடையாளம் காட்டி உள்ளார்.

நினன் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள பாடல் காதில் ஒலிக்கிறது. தினேஷ் கேமரா உலக கோப்பை கிரிக்கெட்டை கண்முன் நிறுத்துகிறது.

Next Story