நெடுநல்வாடை


நெடுநல்வாடை
x
தினத்தந்தி 23 March 2019 2:51 AM GMT (Updated: 23 March 2019 2:51 AM GMT)

எப்போதாவது வரும் சிறந்த கதையம்சம் உள்ள தரமான படங்களில், இதுவும் ஒன்று. படம் "நெடுநல்வாடை" படத்தின் விமர்சனம்.

சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. வயல்களும், தோட்டங்களுமாக உள்ள அந்த கிராமத்தின் ஒற்றையடி பாதையில் நடந்து வரும் பெரியவர் ‘பூ’ ராம் திடீரென்று மயங்கி விழுகிறார். அவருடைய நினைவலைகளில் கதை பின்நோக்கி செல்கிறது. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் காதல்வசப்பட்டு வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு ஒரு மகன், ஒரு மகள். கணவன் ஒரு குடிகாரன்.

அதனால் வறுமையில் வாடிய செந்தி தன் மகன்-மகளுடன் தந்தை ‘பூ’ ராம் வீட்டில் அடைக்கலமாகிறார். அவளை அண்ணன் மைம் கோபி வெறுத்து ஒதுக்குகிறான். வீட்டுக்குள் சேர்க்க மறுக்கிறான். செந்தியின் மகன் (புதுமுகம்) இளங்கோ படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். வளர்ந்து வாலிபனான நிலையில், அவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலி நாயருக்கும் காதல் வருகிறது.

பேரன் நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும்...அதனால் மகள் செந்தியின் கஷ்டங்கள் விலக வேண்டும் என்று தாத்தா ‘பூ’ ராம் ஆசைப்படுகிறார். அதற்கு பேரனின் காதல் தடையாக இருக்குமோ என்று கருதி, அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கிறார். அஞ்சலி நாயர் வீட்டிலும் அந்த காதலை ஏற்க மறுக்கிறார்கள். தாத்தாவின் ஆசை நிறைவேறியதா, அஞ்சலி நாயரின் காதல் வென்றதா? என்பதே ‘நெடுநல்வாடை.’

படத்தின் ஜீவனே ‘பூ’ ராம்தான். செல்லையா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு கிராமத்து விவசாயியாக-பாசமுள்ள தந்தையாக-பேரனின் படிப்பும், வாழ்க்கையும் சிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற தாத்தாவாக படம் முழுவதும் நெகிழவைத்து விடுகிறார். குறிப்பாக அந்த தாத்தா பேரனுக்கு அறிவுரை சொல்லும் இடங்கள், மகள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நிஜ தாத்தாவின் வலியையும், வேதனையையும் வெளிப்படுத்துகின்றன.

கதாநாயகன் இளங்கோ, பொருத்தமான தேர்வு. ஒரு கிராமத்து இளைஞரை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம், கதாநாயகி அஞ்சலி நாயர். அழகும், நடிப்பு திறனும் சேர்ந்த நடிகைகள் பட்டியலில் இவரும் இடம் பெறுவார். மருதுபாண்டியாக அஜெய் நடராஜ், கொம்பையாவாக மைம் கோபி, நம்பியாக ஐந்து கோவிலான், பேச்சியம்மாவாக செந்தி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாக நெஞ்சில் நிலைக்கிறார்கள்.

வினோத் ரத்தினசாமியின் கேமரா கிராமத்து அழகையும், யதார்த்தங்களையும் பிசிறு இல்லாமல் பதிவு செய்திருக்கிறது. ஜோஸ் பிராங்ளின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு கவித்துவம் சேர்க்கிறது. பாடல் வரிகள் ஒரு படத்துக்கு எத்தனை அவசியம் என்பதை வைரமுத்துவின் கவிதை வரிகள் உணர்த்துகின்றன.

“கஞ்சிக்குள்ள போட்ட உப்பு கஞ்சியெல்லாம் கூடிப்போகும்...அதுபோல நெஞ்சில் சேர்ந்தியே...கண்மூடி தூங்கப்போனா கண்ணோடு கலகம் செஞ்ச கனவோடு சிறகாய் நீந்தியே” என்ற கவிஞரின் வரிகள், காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

கதை சொன்ன விதத்திலும், காட்சிகளை உயிர்ப்புடன் நகர்த்திய விதத்திலும், டைரக்டர் செல்வகண்ணன் சிறந்த டைரக்டர் பட்டியலில் இடம் பிடிக்கிறார். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம், பாராட்டுக்குரியது. படத்தில் யாரும் நடித்ததாக தெரியவில்லை. தாத்தா-பேரன் தொடர்பான காட்சிகள், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்து விடுகின்றன. இந்த உருக்கமான கதைக்குள், உயிரோட்டமான ஒரு காதல் கதையை புகுத்தி, மேலும் உருக வைத்து விடுகிறார்கள். வசனம், பல இடங்களில் கைதட்ட வைக்கிறது.

அந்த பாசம் மிகுந்த பேரன் வெளிநாட்டுக்கு போனபின், தனது பாசக்கார தாத்தாவிடம் வருடக்கணக்கில் போனில் கூட பேசவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ‘கிளைமாக்ஸ்,’ நெஞ்சை கனக்க வைக்கிறது.

Next Story