ஐரா


ஐரா
x
தினத்தந்தி 30 March 2019 9:49 PM IST (Updated: 30 March 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையில் வேலை பார்க்கும் நயன்தாரா ‘யூடியூப்’ சேனல் ஆரம்பிக்க சொல்லும் யோசனைக்கு நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது.

இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவரை பெற்றோர் திருமணத்துக்கு வற்புறுத்துவது மேலும் எரிச்சலூட்டுகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு பஸ் ஏறிவிடுகிறார்.

பாட்டிக்கு கண் தெரியாது. வேலைக்காரர் யோகிபாபுவுக்கு காது கேட்காது. அவர்களுடன் சேர்ந்து யூடியூப்பில் பேய்கள் பற்றி பயமுறுத்தும் வீடியோ போடுகிறார். அது வைரலாகி நயன்தாராவை பிரபலப்படுத்துகிறது. அதே நேரம் சென்னையில் மாடியில் இருந்து விழுந்து மர்மமாக பலர் இறக்கின்றனர். அது நயன்தாராவை போல் இருக்கும் ஒரு பேய் வேலை என்று தெரிய அதிர்ச்சி.

அந்த பேய் நயன்தாராவையும் கொல்ல பொள்ளாச்சி பங்களாவுக்குள் நுழைகிறது. பேயின் சங்கிலித்தொடர் கொலைகளுக்கான காரணங்களும் நயன்தாராவை துரத்துவது ஏன் என்பதும் மீதி கதை.

பட்டணத்து பெண் யமுனா, கிராமத்து பெண் பவானி என்று முழு கதையையும் தாங்கும் இரு வேடங்களில் வருகிறார் நயன்தாரா. மாடர்ன் உடையில் ஸ்டைல், கம்பீரம், துறுதுறு என யமுனா கேரக்டரில் வசீகரிக்கிறார். பேய் வீடியோவில் பயமுறுத்துவதிலும் சுவாரஸ்யம். பேய் வந்த பிறகு முகம் நிறைய பீதி காட்டுகிறார்.

பிறந்த உடனேயே தந்தையை இழந்து ராசியில்லாதவள் என்று ஒதுக்கப்பட்டு உறவினர் பாலியல் தொல்லை, ஒரே ஆதரவான பள்ளி காதலனின் பிரிவு என்று துயரத்தின் இறுதிவரை சென்று மெழுகாய் கரைந்து மொத்த பேரையும் கண்கலங்க வைக்கும் பரிதாபமான பவானியாக இன்னொரு கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார். கருப்பு நிறத்தில் தோற்றத்தையும் வித்தியாசப்படுத்தி உள்ளார்.

யமுனாவை விட பவானியே கதையின் ஜீவனாக மனதில் ஒட்டிக்கொள்கிறார். கிளைமாக்சில் இரு வேடங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டி இருக்கிறார். கலையரசன் யதார்த்தம் மீறாத நடிப்பில் மனதில் நிற்கிறார். பாசமான தாய் தந்தையாக ஜெயப்பிரகாஷ்-மீரா கிருஷ்ணன் யோகிபாபுவின் நகைச்சுவையில் சிரிப்பு வரவில்லை. பேய் காவு வாங்குவதன் பின்னணி காரணங்களை வலுவாக்கி இருக்கலாம். பேய் வருகிற காட்சிகளில் திகில் இல்லை.

சமூக விஷயங்களை வைத்து பேய்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சர்ஜூன். பயமுறுத்தலுக்கு சுந்தர மூர்த்தியின் பின்னணி இசையும் சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவும் உதவியிருக்கிறது.
1 More update

Next Story