கே 13


கே 13
x
தினத்தந்தி 4 May 2019 10:07 PM IST (Updated: 4 May 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

கதைக்காக கொலைகாரராக மாறும் டைரக்டர். கதாநாயகன் அருள்நிதி, கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், டைரக்‌ஷன் பரத் நீலகண்டன். படம் "கே 13" படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  அருள்நிதி, ஒரு திரைப்பட உதவி டைரக்டர். தன் திறமையை நிரூபித்து டைரக்டர் ஆகிறார். ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு தொடங்கி பத்து நாட்கள் மட்டும் நடைபெறுகிறது. அதோடு அந்த படம் நின்று போகிறது. அடுத்து, அவருடைய கதையை நண்பரே திருடி படம் எடுத்து வெற்றி பெறுகிறார்.

அருள்நிதி விரக்தி அடைகிறார். அவரை நண்பர்கள் வற்புறுத்தி ஒரு கிளப்புக்கு அழைத்து போகிறார்கள். அங்கே ஆட்டமும், பாட்டுமாக மது விருந்து கொண்டாட்டம் நடக்கிறது. அருள்நிதி குடிக்கிறார். போதை தலைக்கேறி மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறார். அத்தனை போதையிலும் அவருக்குள் ஒரு நல்ல கதைக்கான தேடல் இருக்கிறது.

இந்த நிலையில், அங்கே மது அருந்திக் கொண்டிருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அருள்நிதியின் கவனத்தை ஈர்க்கிறார். தேடிப்போய் அவருடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்கிறார். ஷ்ரத்தாவின் அழகில் அருள்நிதி கிறங்க-“இங்கே வேண்டாம். என் வீட்டுக்கு போய் விடலாம்” என்கிறார், ஷ்ரத்தா. இருவரும் காரில் ஷ்ரத்தாவின் வீட்டுக்கு செல்ல- அருள்நிதியை ஷ்ரத்தா ஷோபாவில் கட்டிப்போடுகிறார். அடுத்து அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், கத்தியால் கையை வெட்டிக் கொள்கிறார். எதிரில் உள்ள இன்னொரு ஷோபாவில் சாய்ந்தபடி, அவர் இறந்துபோகிறார்.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து மற்றவர்கள் கண்ணில் படாமல் அருள்நிதி எப்படி தப்பிக்கிறார்? என்பதை திடுக்...திடுக்... திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் பரத் நீலகண்டன். ‘கிளைமாக்ஸ்,’ கதையை தலைகீழாக புரட்டிப்போடுகிறது. குற்றப்பின்னணியிலான திகில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதிக்கு மற்றொரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்.’ படத்துக்கு படம் அவருடைய நடிப்பு மெருகேறுவது போல், இந்த படத்திலும் நடிப்பில் பல படிகள் உயர்ந்து நிற்கிறார். மதுவின் உச்சகட்ட போதையை கண்களிலும், முகத்திலும் காட்டி, கதாபாத்திரத்துடன் ஒன்றவைக்கிறார்.

மலர் என்ற மலர்விழியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். அழகாக இருக்கிறார். பெரும்பகுதி காட்சிகளில் இறந்து போன பிணமாக நடித்து திகிலூட்டுகிறார். காயத்ரி, இரண்டே இரண்டு காட்சிகளில் அழுதுகொண்டே வருகிறார். படம் முழுக்க நிறைய நடிகர்-நடிகைகள். எல்லோருமே மின்னல் மாதிரி வந்துபோகிறார்கள்.

படத்தின் பெரும் பகுதி சம்பவங்கள் ஒரு வீட்டுக்குள்ளேயே நிகழ்வதால், திரைக்கதையில் வேகக்குறைவு ஏற்படுவது நிஜம். அந்த குறை பெரிய அளவில் தெரியாதபடி அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும் பதற்றம் கூட்டுகின்றன.
1 More update

Next Story