புலிகளை காப்பதன் முக்கியத்துவம் கொண்ட நகைச்சுவையான படம் தும்பா - விமர்சனம்


புலிகளை காப்பதன் முக்கியத்துவம் கொண்ட நகைச்சுவையான படம்  தும்பா - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 5:12 PM GMT (Updated: 19 July 2019 5:12 PM GMT)

தர்ஷனின் நண்பன் தீனாவுக்கு டாப் ஸ்லிப் வனப்பகுதியில் புலி சிலைக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த பணி கிடைக்கிறது. படம் தும்பா சினிமா விமர்சனம்.

கண்ட வேலைகளை செய்து சம்பாதிக்கும் தர்ஷன் பெட்ரோல் பங்கில் பணியாற்றும்போது அசதியால் தூங்கிவிட அவரிடம் இருந்த பணம் கொள்ளை போகிறது. அதோடு வேலையும் பறிபோகிறது. தர்ஷனின் நண்பன் தீனாவுக்கு டாப் ஸ்லிப் வனப்பகுதியில் புலி சிலைக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த பணி கிடைக்கிறது. இருவரும் அங்கு புறப்படுகின்றனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கு வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம். அவரும் கேமராவுடன் டாப் ஸ்லிப் செல்கிறார். அந்த வனப்பகுதிக்குள் கேரளாவில் இருந்து ஒரு புலி தப்பி வந்து விடுகிறது. அதை சட்டவிரோதமாக பிடித்து விற்க வன அதிகாரி திட்டமிடுகிறார்.

புலியை புகைப்படம் எடுக்க தர்ஷனையும், தீனாவையும் கீர்த்தி பாண்டியன் அழைத்துச் செல்கிறார். காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது கதை.

“தர்ஷனின் அப்பாவித்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. அவருக்கு நகைச்சுவையும் வருகிறது. புலிக்கு பெயிண்ட் அடிப்பதும், மழை வந்து கரைப்பதும், புலியை நினைத்து நடுங்குவதும் சிரிக்க வைக்கின்றன. கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியாக வருகிறார். புலியையும், அதன் குட்டியையும் காப்பாற்ற துடிப்பதில் நடிப்பும் வருகிறது.

ஜெயம் ரவி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து புலிகளை காப்பதன் முக்கியத்துவம் சொல்லிவிட்டு போகிறார். பெயிண்டராக வரும் தீனா சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார். பேசிக்கொண்டே இருப்பது சலிப்பு. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதையை காட்டுக்குள் பயணித்ததும் புலி வேட்டை, யானைகள் துரத்தல் என்று விறுவிறுப்பாக்கி இருக்கிறார், இயக்குனர் ஹரீஷ் ராம்.

நரேன் இளன் ஒளிப்பதிவு பெரிய பலம். மலைப்பகுதியையும், வனத்தின் அழகையும் ரம்மியாக படம்பிடித்துள்ளார். அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என்று 3 பேர் இசையமைத்துள்ளனர். அனிருத்தின் ‘மெலடி’ பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.

Next Story