கிராமத்தில் விஷவாயு தொழிற்சாலை கட்ட முயற்சிக்கும் வில்லனும், அதை தடுக்க முயற்சிக்கும் கதாநாயகனும் - சங்கத்தமிழன்


கிராமத்தில் விஷவாயு தொழிற்சாலை கட்ட முயற்சிக்கும் வில்லனும், அதை தடுக்க முயற்சிக்கும் கதாநாயகனும் - சங்கத்தமிழன்
x
தினத்தந்தி 10 Jan 2020 8:23 AM GMT (Updated: 10 Jan 2020 8:23 AM GMT)

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  விஜய் சேதுபதி தேனி பக்கம் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். விவசாயி. இவருடைய தந்தை, நாசர். தாய், துளசி. முறைப்பெண், நிவேதா பெத்துராஜ். வெளியூரை சேர்ந்த படித்த மற்றும் பணக்கார இளைஞரை திருமணம் செய்ய இவர் மறுத்து, விஜய் சேதுபதியைத்தான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த நிலையில், அந்த ஊரில் ரவிகிஷன், ‘காப்பர்’ தொழிற்சாலை கட்ட முன்வருகிறார். இதற்கு கையூட்டு வாங்கிக் கொண்டு விவசாயிகளின் நிலத்தை அபகரித்து கொடுக்கிறார், உள்ளூர் எம்.எல்.ஏ. ஆசுதோஷ் ராணா. இவரிடம் தொழிற்சாலை நமக்கு வேண்டாம் என்று சொல்கிறார், நாசர். அவருடைய வேண்டுகோளை ஏற்காமல், ரவிகிஷனுக்கு ஆதரவாக ஆசுதோஷ் ராணா செயல்படுகிறார்.

தேர்தல் வருகிறது. ஆசுதோஷ் ராணாவை எதிர்த்து நாசர் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். தோல்வி அடைந்த ஆத்திரத்தில் ஆசுதோஷ் ராணா, நாசரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்கிறார். விஜய் சேதுபதியை குற்றுயிரும், குலை உயிருமாக நெருப்பில் தூக்கி போடுகிறார்கள்.

விஜய் சேதுபதியை போன்ற தோற்றம் உள்ள முருகன் (இன்னொரு விஜய் சேதுபதி), சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி, சென்னையில் நண்பர் சூரியுடன் சுற்றுகிறார். அவரை ரவிகிஷனின் மகள் ராஷிகன்னா காதலிக்கிறார். இந்த காதலை பயன்படுத்தி ரவிகிஷன், விஜய் சேதுபதியை கிராமத்துக்கு அனுப்பி தனக்கு சாதகமாக நடிக்கும்படி கூறுகிறார்.

முருகன் (விஜய் சேதுபதி) கிராமத்துக்கு வருகிறார். அவர் கிராமத்து விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்தாரா? அல்லது ரவிகிஷனுக்கு ஆதரவாக நடந்தாரா? என்பது மீதி கதை.

விஜய் சேதுபதி சூரியுடன் சேர்ந்து ‘காமெடி’ செய்கிறார். நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா ஆகிய இருவருடன் காதலும் செய்கிறார். ரவிகிஷன், ஆசுதோஷ் ராணாவின் அடியாட்களை ஒரே அடியில் வீழ்த்தி சண்டையும் போடுகிறார். ஒரு அதிரடி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுலபமாக செய்து முடிக்கிறார். கதாநாயகிகள் நிவேதா பெத்துராஜ், ராஷிகன்னா ஆகிய இருவருக்கும் அதிக வேலை இல்லை.

நாசர் ஊர் பெரிய மனிதர். சூரி, நிஜமாகவே சிரிக்க வைக்கிறார். அவர் வரும் காட்சிகளில் தியேட்டரில், கலகலப்பு. வில்லன்களில் ரவிகிஷனிடம் ஆக்ரோஷம் போதாது. கதாநாயகன் ‘கெட்-அப்’பில் காணப்படுகிறார். மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீரஞ்சனி, துளசி, சவுந்தர்ராஜா ஆகியோர் சில நிமிடங்களுக்கு வந்து போகிறார்கள்.

விவேக்-மெர்வின் இசையில், பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையில், வாத்தியங்களின் சத்தம் அதிகம். வேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமிய காட்சிகள், அழகு. பசுமை போர்த்திய வயல்வெளிகள், பேரழகு. ஒரே தோற்றம் உள்ள 2 கதாபாத்திரங்களை வைத்து அடிதடி-ரகளையுடன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய்சந்தர்.

இடைவேளை வரை மிதமான வேகத்தில் கதை நகர்கிறது. அப்புறம் குடும்ப பாசம், ‘சென்டிமென்ட்’ என காட்சிகள், நெஞ்சை தொடுகின்றன. சங்கத்தமிழன், முருகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் வேறு, வேறு நபர்களா? ஒரே நபரா? என்பதை தெளிவாக காட்டியிருக்கலாம். விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

Next Story