ஒரு இளம் ஜோடியின் காதலும், அதன் விளைவுகளும் - உற்றான்


ஒரு இளம் ஜோடியின் காதலும், அதன் விளைவுகளும் -  உற்றான்
x

கானா சுதாகரின் அக்காள் ‘வெயில்’ பிரியங்கா. தம்பி சுதாகரையும், ரோஷன் உதயகுமாரையும் மகன்களைப்போல் வளர்க்கிறார். படம் உற்றான் விமர்சனம்.

கதையின் கரு:  ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். கானா சுதாகரின் அக்காள் ‘வெயில்’ பிரியங்கா. தம்பி சுதாகரையும், ரோஷன் உதயகுமாரையும் மகன்களைப்போல் வளர்க்கிறார்.  இந்தநிலையில், கல்லூரி தேர்தல் வருகிறது. அதில் ரோஷன் வெற்றி பெறுகிறார். இதனால், தோல்வி அடைந்த மாணவரின் பகையை சம்பாதிக்கிறார். ஊர் பெரிய மனிதர் வேல.ராமமூர்த்திக்கும் விரோதி ஆகிறார். வேலராமமூர்த்திக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ரவிஷங்கர், ரோஷன் உதயகுமாருக்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பெண்கள் கல்லூரியில் கட்டிட வேலை நடப்பதால் மாணவர்களும், மாணவிகளும் ஆண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அப்போது, போலீஸ் அதிகாரி மதுசூதனனின் மகள் கோமலிக்கும், ரோஷன் உதயகுமாருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இந்த காதலுக்கு மதுசூதனன் எதிர்ப்பாக இருக்கிறார். ஊர் பெரிய மனிதர் வேலராமமூர்த்தி, போலீஸ் அதிகாரி மதுசூதனன் ஆகிய இருவரும் சேர்ந்து ரோஷன் உதயகுமாரை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரோஷன் உதயகுமார் உயிர் தப்பினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

கதாநாயகன் ரோஷன் உதயகுமாருக்கு இது முதல் படம் போல் தெரியவில்லை. அனுபவப்பட்ட கதாநாயகன் போல் காதல், மோதல் காட்சிகளில், கவனம் ஈர்க்கிறார். பாடல், சண்டை காட்சிகளில் முத்திரை பதிக்கிறார். நடிப்பிலும் திறமை காட்டியிருப்பதால், தமிழ் பட உலகுக்கு நல்வரவாக தெரிகிறார். கோமலி அழகும், இளமையும் கொண்ட நாயகி. கல்லூரி மாணவி வேடத்தில், கச்சிதம். ‘வெயில்’ பட புகழ் பிரியங்காவுக்கு குணச்சித்ர வேடம். நடிப்பில் தேர்ந்தவர் என்பதை பல காட்சிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் ரவிஷங்கர் தாதா வேடத்துக்கு பொருந்துகிறார்.

கானா சுதாகர், இமான் அண்ணாச்சி, வேலராமமூர்த்தி, மதுசூதனராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில், கதையை தாங்கிப் பிடிக்கிறார்கள். ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு, சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. பாடல்கள் எல்லாமே இளைஞர்களை ஆட வைக்கும் ‘டமுக்கு டப்பாங்’ ராகங்கள்.

படத்தின் முதல் பாதியில் கல்லூரி மாணவர்களின் ஆட்டமும், பாட்டுமாக கலகலப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் ராஜா கஜினி. இடைவேளைக்குப்பின் உணர்வுப்பூர்வமான கதையோட்டம், காட்சிகளுடன் ஒன்ற வைக்கிறது. படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளன. மாணவர்கள் மோதல் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

Next Story