காதல் கலப்பு திருமணம்-ஆணவ கொலைகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக உள்ள படம் - கன்னி மாடம்


காதல் கலப்பு திருமணம்-ஆணவ கொலைகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக உள்ள படம் - கன்னி மாடம்
x
தினத்தந்தி 2 March 2020 10:37 PM IST (Updated: 2 March 2020 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஆணவ கொலைகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் போஸ்வெங்கட். "கன்னி மாடம்" சினிமா விமர்சனம்.

சென்னையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கும் ஸ்ரீராம் கார்த்திக்கும், அருள்தாசும் உறவினர்கள். கிராமத்தில் காதல் கலப்பு திருமணம் செய்த விஷ்ணுவும், சாயா தேவியும் சென்னை வந்து ஸ்ரீராம் கார்த்திக் வீட்டின் அருகில் வசிக்கின்றனர். சாயாதேவியை கொன்று விஷ்ணுவை அழைத்து செல்ல அவரது தாய்மாமா வெறியோடு அலைகிறார்.

ஒரு கட்டத்தில் விபத்தில் சிக்கி விஷ்ணு இறக்கிறார். ஆதரவற்ற நிலையில் தவிக்கும் சாயாதேவிக்கு ஆதரவாக இருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். இன்னொரு புறம் கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் சாதி வெறிபிடித்த ஸ்ரீராம் கார்த்திக்கின் தந்தை பரோலில் வெளியே வருகிறார்.

அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் மனதை கனக்க செய்கின்றன. ஸ்ரீராம் கார்த்திக் தனது சொந்த வாழ்க்கை வலிகளை சுமந்து காதல் ஜோடிக்கு உதவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் வருகிறார். கணவனை இழந்த சாயாதேவிக்கு உதவும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு அதிரவைக்கிறது.

சாயாதேவிக்கு கதையை தாங்கி பிடிக்கும் வலுவான கதாபாத்திரம். கணவனை இழந்து நிர்க்கதியாக தவிக்கும்போது உணர்ச்சிகரமான நடிப்பை முகத்தில் கடத்துகிறார். முடிவு பரிதாபம். ஸ்ரீராம் கார்த்திக்கு பக்கபலமாக இருக்கும் அருள்தாஸ், நடிகராகும் ஆசையில் சுற்றும் சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீராம் கார்த்திக்கை ஒரு தலையாக காதலிக்கும் வலினா, கவுன்சிலராக வரும் பிரியங்கா, சாதி வெறியுடன் அலையும் கஜராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் நிறைவு.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பிற்பகுதியில் வேகம். ஆணவ கொலைகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் போஸ்வெங்கட். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை வைத்து இருப்பதில் அவரது திறமை பளிச்சிடுகிறது.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜே.ஹாரிஸ் படத்துக்கு இன்னொரு கதாநாயகன், குறுகலான தெருக்களிலும் ஓடி உழைத்து இருக்கிறது அவரது கேமரா. ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கி திறமையான ஒளிப்பதிவாளராக கவனம் பெறுகிறார். ஹரி சாயின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன.
1 More update

Next Story