ஒரு நாடோடி இளைஞரின் காதலும், பிரிவும் - ஜிப்ஸி


ஒரு நாடோடி இளைஞரின் காதலும், பிரிவும் - ஜிப்ஸி
x
தினத்தந்தி 7 March 2020 10:22 PM GMT (Updated: 7 March 2020 10:22 PM GMT)

ஒரு குதிரையை வைத்துக்கொண்டு அதை ஆடவிட்டு வித்தை காட்டி பிழைப்பு நடத்துகிறார், தேசாந்தரி இளைஞர் ஜீவா படம் "ஜிப்ஸி" விமர்சனம்.

கதையின் கரு:  கதை, கா‌‌ஷ்மீரில் தொடங்குகிறது. ஒரு குதிரையை வைத்துக்கொண்டு அதை ஆடவிட்டு வித்தை காட்டி பிழைப்பு நடத்துகிறார், தேசாந்தரி இளைஞர் ஜீவா. இவர், நாகூரில் நடக்கும் கந்தூரி விழாவுக்கு தன் குதிரையுடன் வருகிறார். அவர் மீது நடா‌ஷா சிங்குக்கு காதல் வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கிறார்கள். அந்த திருமணத்தை நடா‌ஷா சிங் விரும்பவில்லை. ஜீவாவை சந்தித்து தன்னை குதிரை மீது உட்கார வைத்து அழைத்து செல்லும்படி கூறுகிறார். அவருடைய ஆசையை ஜீவாவும் நிறைவேற்றுகிறார். நடா‌ஷா சிங் தன்னை ஒரேயடியாக அங்கிருந்து அழைத்து செல்லும்படி, ஜீவாவிடம் கூறுகிறார்.

அவர் மீது ஜீவாவுக்கும் காதல் வருகிறது. இருவரும் மும்பையில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது இந்து-முஸ்லிம் கலவரம் வெடிக்கிறது. அந்த கலவரத்தில் ஜீவா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடா‌ஷா சிங், நடுரோட்டில் நிற்கிறார். ஜெயிலில் ஒரு வருடம் இருந்து விட்டு வெளியே வரும் ஜீவா, மனைவி நடா‌ஷா சிங்கை காணாமல் தவிக்கிறார்.

நடா‌ஷா சிங்கை அவருடைய தந்தை கொச்சிக்கு அழைத்துப்போய்விட்ட விவரம் அறிந்து, ஜீவா கொச்சிக்கு போகிறார். அங்கு நடா‌ஷா சிங் கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து மகிழ்ந்த ஜீவா, மனைவியை தன்னுடன் வந்துவிடும்படி அழைக்கிறார். அவருடைய அழைப்பை நடா‌ஷா சிங் ஏற்றுக்கொண்டாரா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

நாடோடி இளைஞராக ஜீவா. கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். நடா‌ஷா சிங் மீது காதல் வசப்படுவதையும், அவரை தேடி அலைவதையும், குழந்தையுடன் இருப்பதை பார்த்து மகிழ்வதையும் ஜீவா தனது உணர்ச்சிகரமான நடிப்பில், மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். படம் பார்ப்பவர்களை, அவரது ‘ஜிப்ஸி’ வேடத்துடன் ஒன்ற வைக்கிறார். சண்டை காட்சிகளில், வழக்கம்போல் அவருடைய வேகம் ரசிக்க வைக்கிறது.

நடா‌ஷா சிங், அழகான தேர்வு. ஜீவாவின் நல்ல குணத்தை பார்த்து மனதை பறிகொடுப்பது, கலவரத்தின்போது கொலை வெறி பிடித்தவர்களின் முற்றுகையில் சிக்குவது, கணவர் ஜீவாவை காணாமல் நடுரோட்டில் நிற்பது ஆகிய காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறி, ஒட்டுமொத்த ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார். ஜீவாவை பார்க்கும்போதெல்லாம் கலவரமும், கொலை வெறியர்களும் இவர் கண்முன் வந்து போவது, மிரட்டலான காட்சிகள்.

படத்தில் கதாநாயகி நடா‌ஷா சிங்கைப்போல் ஒளிப்பதிவும் அழகு. கலவர காட்சிகளை நேரில் பார்ப்பது போன்ற பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி விடுகிறார், ஒளிப்பதிவாளர் செல்வகுமார். சந்தோ‌‌ஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஒருவித ஈர்ப்பை தருகின்றன. நாடோடி இளைஞரை பற்றிய கதையும், கதாபாத்திரங்களும் வித்தியாசமான ரசனையை கொடுக்கின்றன. இதற்காகவே டைரக்டர் ராஜுமுருகனை பாராட்டலாம். படத்தின் ஆரம்பத்தில் காட்டிய சமூக அக்கறையை படம் முழுக்க பதிவு செய்திருக்கலாம்.

Next Story