சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளை முன்வைக்கும் படம் - இந்த நிலை மாறும்


சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளை முன்வைக்கும் படம் - இந்த நிலை மாறும்
x
தினத்தந்தி 9 March 2020 9:49 AM GMT (Updated: 9 March 2020 9:49 AM GMT)

சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். "இந்த நிலை மாறும்" படத்திற்கான விமர்சனம் பார்க்கலாம்.

வக்கீல் ராம்குமார் சுதர்சனும், ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் அஸ்வின் குமாரும் நண்பர்கள். இருவரும் சாம்சுடன் இணைந்து சொந்தமாக இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன் தொடங்குகின்றனர். அதில் திருமணம் பற்றிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். உள்ளூர் பத்திரிகையில் வரன் தேவை என்று விளம்பரம் கொடுத்தவர்களையும் தொடர்பு கொண்டு கலாய்க்கிறார்கள்.

இதனால் விளம்பரங்களை அவர்கள் வாபஸ் பெறுகின்றனர். தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியதாக பத்திரிகை நிர்வாகம் இன்டர் நெட் ரேடியோ ஸ்டேஷன் மீது வழக்கு தொடுக் கிறது. அவர்களின் வக்கீலாக ஒய்.ஜி.மகேந்திரன் கோர்ட்டில் ஆஜராகிறார். இன்டர்நெட் ரேடியோ ஸ்டேசனுக்காக ராம் குமார் சுதர்சன் வாதாடுகிறார். ரேடியோ ஸ்டேஷன் தொடர்ந்து செயல்பட்டதா? என்பது மீதி கதை.

ராம்குமார் சுதர்சன் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். கோர்ட்டில் எதிர் அணி வக்கீல் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பதிலடி கொடுத்து வாதாடும் காட்சிகளில் கம்பீரம். பொய் சாட்சியாக வரும் பெண்ணுக்கு கோர்ட்டிலேயே தாலி கட்ட முன்வந்து அதிரவைக்கிறார். அஸ்வின் குமார் துறுதுறுவென வருகிறார். வரன் தேவை விளம்பரம் கொடுத்தவர்களுக்கு போன் செய்து கலாய்க்கும் காட்சிகள் சுவாரஸ்யம். சாம்ஸ் சிரிக்க வைக்கிறார்.

நீதிபதியாக வரும் டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், கார்த்திக், வினோத் வர்மா, சந்தான பாரதி, பாண்டு, நிவேதிதா சாரா, பிரவீன் என்று நட்சத்திர பட்டாளம் நிறைய. திரைக்கதையை இன்னும் வலுவாக செதுக்கி இருக்கலாம்.

இரண்டு நிர்வாகத்துக்குள் நடக்கும் தொழில்போட்டியை கலகலப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் அருண்காந்த். சுகுமார் சுந்தரின் ஒளிப்பதிவும், ஆலன் செபாஸ்டின் பின்னணி இசையும் பக்க பலம்.

Next Story