கொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு


கொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு
x
தினத்தந்தி 17 March 2020 1:42 AM IST (Updated: 17 March 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

கதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. "அசுரகுரு" படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  கதாநாயகன் ரெயில் கூரையை உடைத்து உள்ளே இறங்கி, பெட்டி பெட்டியாக இருக்கும் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கிறார். அடுத்து ஹவாலா ஆசாமியின் பணத்தை திருடுகிறார். இதுபோல் சில பல இடங்களில் கொள்ளையடித்து, அந்த பணத்தை ஒரு அறையில் பதுக்கி வைக்கிறார்.

இதற்கு போலீஸ் வேலையில் இருக்கும் அவருடைய நண்பர் ஜெகன் உதவியாக இருக்கிறார். விக்ரம் பிரபுவை பிடிக்கும் பொறுப்பு துப்பறியும் நிபுணர் மகிமா நம்பியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் துப்பு துலக்கும்போது, விக்ரம் பிரபு ஒரு வினோத நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்ற விவரம் தெரியவருகிறது. அவர் மீது இவருக்கு முதலில் இரக்கம் ஏற்படுகிறது. அப்புறம் அது காதலாக மாறுகிறது.

இந்த நிலையில், விக்ரம் பிரபு கைது செய்யப்படுகிறார். கைது செய்த போலீஸ் அதிகாரியிடம் விக்ரம் பிரபு ஒரு ‘டீல்’ பேசுகிறார். அதை அந்த போலீஸ் அதிகாரியும் ஏற்றுக் கொள்கிறார். அந்த ‘டீல்’ என்ன, அதை இருவரும் கடைபிடித்தார்களா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

படத்தின் தொடக்க காட்சியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. விக்ரம் பிரபு, ஓடும் ரெயிலில் கொள்ளையடிப்பது, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. பணத்தை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஏற்படும் வினோத நோய், இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

படம், விக்ரம் பிரபுவின் நடிப்பில் மேலும் மெருகேறி இருக்கிறது. சண்டை காட்சிகளில் அவர் அதிவேகம் காட்டியிருக்கிறார். கதாநாயகி மகிமா நம்பியாருக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். யோகி பாபு வரும்போதெல்லாம் அவருடைய வசன காமெடி, சிரிக்க வைக்கிறது. ஜெகன், மனோபாலா, நாகி நீடு, குமரவேல் ஆகியோரும் இருக்கிறார்கள்.

கணேஷ் ராகவேந்திரா இசையில், பாடல்கள் தேறவில்லை. சைமன் கே.கிங்கின் பின்னணி இசை, காட்சிகளை வேகமாக கடத்துகிறது. ராஜ்தீப் டைரக்டு செய்திருக்கிறார். வித்தியாசமான கதை. திரைக்கதை இன்னும் கனமாக இருந்திருந்தால், படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.

1 More update

Next Story